Jan 1, 2026 - 10:22 PM -
0
நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்படும் நவீன டிஜிட்டல் தீர்வுகளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான புதிய வேலைத்திட்டம் இன்று (01) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ், போக்குவரத்துச் சேவையை மேலும் வலுப்படுத்துவதும், பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையிலான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
அதன்படி பயணிகளின் வசதிக்காக வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம், இன்று (01) மாகும்புர பல் நிலை போக்குவரத்து மையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தும் போது பயணிகளிடமிருந்து மேலதிகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
இதன் மூலம் பயணிகள் சரியான கட்டணத்தை மாத்திரம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக இன்று முதல் மாகும்புர - காலி மற்றும் மாகும்புர - எம்பிலிபிட்டிய ஆகிய வழித்தடங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, மக்கள் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

