Jan 2, 2026 - 09:43 PM -
0
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் முன்னெடுக்கப்பட்ட சவாலான ஒரு நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் அமைதிகாக்கும் பிரிவினர் 14 ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையின் Mi-17 ரக ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், கடந்த டிசம்பர் 31ஆம் திகதி மத்திய ஆபிரிக்கக் குடியரசின் 'Obo' பகுதியில் இருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வான்வழியாகக் கொண்டு செல்லப்பட்டன.
மத்திய ஆபிரிக்காவின் 'AAKG' ஆயுதக் குழுவினரின் கடும் அச்சுறுத்தல் நிலவும் 'Bambouti' பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் தளம் (TOB) ஒன்றுக்கே இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, குறித்த தளம் மற்றும் ஹெலிகொப்டர் மீது AAKG ஆயுதக் குழுவினரால் உடனடித் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தத் தளத்தின் பாதுகாப்பில் இருந்த 14 மத்திய ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்ட விமானப்படையினர், அவர்களை மீண்டும் 'Obo' பகுதிக்கு அழைத்து வந்தனர்.
இந்த நடவடிக்கையில் விங் கமாண்டர் நூரான் பெரேரா பிரதான விமானியாகவும், பிளைட் லெப்டினன்ட் ஷப்ரித் இக்பால் உதவி விமானியாகவும், பிளைட் லெப்டினன்ட் பிரவீன் ரத்நாயக்க விமானப் பொறியியலாளராகவும் பணியாற்றியதுடன், ஏனைய பணியாளர்களும் இதில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

