Jan 3, 2026 - 10:14 AM -
0
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
"பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி", "சிறுவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் மதுபோதை", "பாடசாலை இடைவிலகலுக்குக் காரணமாகும் மதுபானசாலைகள்", "வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானசாலை குடியிருப்புப் பகுதியில் இயங்குவதால், அருகிலுள்ள ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தோட்டப் பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்துள்ளதால், பலர் மாதாந்த சம்பள அடிப்படையில் கடன் புத்தகத்தில் பதிவு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சுமார் 1,500 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடும் இந்த மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்புக்காகப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
--

