செய்திகள்
2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

Jan 3, 2026 - 03:01 PM -

0

 2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது. 

பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ஆம் ஆண்டில் அடைந்த பொருளாதார நிலைகள் வருமாறு: 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே இலங்கை 2025 ஆம் ஆண்டை வரவேற்றது. 

அதற்கமைய, நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கை வகிக்கும் வரி வருமானம், கடந்த ஆண்டில் சாதனை அளவிலான வருமானமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

93 வருடங்களுக்குப் பின்னர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வருமானமாக 2,203 பில்லியன் ரூபா வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் ஈட்டியுள்ளது. 

இது ஆண்டின் இலக்கு வருமானத்தை விட 33 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் என்பதுடன், 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 15% வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, வரி வருமானம், வரி சாராத வருமானம் மற்றும் மானியங்களுடன் 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் ஈட்டப்பட்டுள்ள மொத்த அரச வருமானம் 4,961.8 பில்லியன் ரூபாவாகும். 

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 35% வளர்ச்சியாகும். 

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 928 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட ஆரம்பக் கணக்கு மீதி (Primary Account Surplus), 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,942 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், 19.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

அதற்கமைய, இந்தக் காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளது. 

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலாக 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 7,197.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாகும். 

சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வசதி உட்பட, 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி வரை 2,344,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

அதற்கமைய, வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. 

அத்துடன், 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சுற்றுலாத் துறை வருமானமாக 2,910.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் முதலீடு குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வலுவான சுட்டியாகக் கருதப்படும் கொழும்பு பங்குச் சந்தையும் 2025 ஆம் ஆண்டில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. 

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் அதிகபட்சமாக 23,659.7 என்ற புள்ளிகளை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்ததோடு, சந்தை புரள்வு முதன்முறையாக 1.2 ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்துள்ளது. 

மேலும், வரலாற்றில் முதன்முறையாக சந்தை மூலதனமாக்கல் (Market Capitalization) 8 ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்ததும் 2025 ஆம் ஆண்டிலாகும். 

2025 ஆம் ஆண்டில் சந்தைப் பரிவர்த்தனைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 6.2% ஆகக் காணப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05