Jan 3, 2026 - 04:25 PM -
0
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து, பேருந்துகள் மூலம் பெருமளவில் பொலிஸார் அழைத்து வரப்பட்டு அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (சனிக்கிழமை) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் புதிதாக புத்தர் சிலையொன்றை நிறுவும் நோக்குடன் சீகிரியாவிலிருந்து சிலையொன்று கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சீகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்குச் செல்ல அனுமதிக்காது பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்பவர்களின் விபரங்களைப் பதிவு செய்து, பொலிஸார் அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறிப்பாக, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளை வழிமறித்த பொலிஸார், அவரது விபரங்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--

