Jan 5, 2026 - 09:49 AM -
0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைதானார்.
அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

