இந்தியா
அசாம், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 'திடீர்' நிலநடுக்கம்!

Jan 5, 2026 - 01:14 PM -

0

அசாம், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 'திடீர்' நிலநடுக்கம்!

இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று (05) அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வை அண்டை பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல் பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர். 

மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசல பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்காள தேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்து எழுந்த பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05