Jan 5, 2026 - 03:56 PM -
0
மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள கொத்மலை, ரம்பொடை வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை வேறு இடத்தில் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொத்மலை தவலந்தென்னையில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார நிலையத்தில் பாடசாலையை தற்காலிகமாக நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார்.
வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையிலிருந்தே மண்சரிவு ஆரம்பித்துள்ளதாலும், பாடசாலைக்கு செல்லும் வீதியின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரின் உளநிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொண்டமான் கலாசார நிலையத்தில் போதிய இடவசதிகள் காணப்படுவதால், வெற்றுக் கட்டிடங்களில் வகுப்பறைகளை அமைத்து, எதிர்வரும் சில நாட்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கொத்மலை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
இப்பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 11 வரை 143 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

