இந்தியா
திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு

Jan 6, 2026 - 07:19 AM -

0

திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1ஆம் திகதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை. 

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர பொலிஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர். 

இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2ஆம் திகதி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று (அதாவது நேற்று) அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் சட்டத்திரணிகள் முறையிட்டனர். 

இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. 

அந்த தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர். 

எனவே சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது கூடாது, கந்தூரி விழா நடத்தக்கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05