Jan 6, 2026 - 03:14 PM -
0
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே பொலிஸார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர்.
மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. வரும் 12 திகதி நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

