Jan 7, 2026 - 12:39 PM -
0
அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (Associated Motorways (Private) Limited - AMW) நிறுவனம் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்திடம் (DMC) அண்மையில் கையளித்திருந்தது. இந்த முயற்சியானது தேசிய மட்டத்திலான அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்கள் நன்மையடைவதோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் நிவாரணப் பொதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஏனைய பொருட்களும் உள்ளடங்கியுள்ளன. இது சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும்.
அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட முன்னிலையில் இந்த நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இதன்போது, AMW நிறுவனத்தின் துரிதமான மனிதாபிமானத் தலையீட்டைப் பாராட்டிய அவர், அனர்த்த நிவாரணப் பணிகளைத் திறம்பட முன்னெடுப்பதில் தனியார் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் AMW நிறுவனம் சார்பாக, விற்பனைப் பிரிவின் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, திட்டமிடல் மற்றும் தயாரிப்பு பிரிவின் பொது முகாமையாளர் சஹன் ஜயவர்தன, சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் உதார குணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
கஷ்டமான காலங்களில் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் கொண்டுள்ள சமூகப் பொறுப்புணர்வை AMW பிரதிநிதிகள் இதன்போது மீள உறுதிப்படுத்தினர். தமது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை (CSR), மிகவும் தேவையான சந்தர்ப்பங்களில், நடைமுறை ரீதியில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது தேசிய அளவிலான மீட்பு முயற்சிகளில் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கும், சமூகங்களின் நீண்டகால ஈடுகொடுக்கும் தன்மையை கட்டியெழுப்புவதற்கும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என AMW நிறுவனம் தெரிவித்துள்ளது.

