Jan 7, 2026 - 12:54 PM -
0
இலங்கையின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சியும் தொழில்வாய்ப்பு சந்தையுமான EDEX Expo 2026, மிகவும் எதிர்பார்க்கப்பட்டவாறு இந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பமாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வருங்கால தொழில்முனைவோர் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வடிவமைக்க இது இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் றோயல் கல்லூரி சங்கத்தினால் (Royal College Union) ஏற்பாடு செய்யப்பட்டு வரும் EDEX கண்காட்சி, ‘இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடியவர்களாக வலுப்படுத்துதல்’ எனும் உன்னத நோக்கத்துடன் நம்பகமான தேசிய தளமாக வளர்ந்துள்ளது.
இக் கண்காட்சி 2026 ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH இலும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டி சிட்டி சென்டரிலும் (Kandy City Centre - KCC) நடைபெறவுள்ளது. இந்த இரு இடங்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். கொழும்பு கண்காட்சியை இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு திரு. சந்தோஷ் ஜா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். இது நிகழ்வின் வலுவான சர்வதேச பரிமாணத்தை பிரதிபலிக்கிறது. இதற்கான அனுமதி இலவசம் என்பதுடன், அரச பல்கலைக்கழகங்கள், தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், முன்னணி அரச சார்பற்ற உயர் கல்வி வழங்குநர்கள் மற்றும் மதிப்புமிக்க வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இங்கே ஒன்று சேரவுள்ளன. இதன் மூலம் மாறுபட்ட விடயங்களை ஆராயவும், வழிகாட்டல்களை பெறவும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த ஆண்டு கண்காட்சியில் 150 இற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் 15 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கனடா, பிரான்ஸ், ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து நேரடி சர்வதேசக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கான பல்வேறு பாதைகளைக் காண்பிக்கவுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் நியூசிலாந்து, சீனா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஆராய முடியும். இதனுடன் இணைந்ததாக நடைபெறும் EDEX Job Fair மூலம் தகவல் தொழில்நுட்பம், வங்கித்துறை, ஊடகம், சமையல் கலை போன்ற பல்வேறு துறைகளில் இலங்கையின் முன்னனி நிறுவனங்களால் நேர்முகத் தெரிவுகள் நடத்தப்பட்டு உடனடி வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.
கடந்த இரு தசாப்தங்களாக, EDEX வெறுமனே ஒரு கண்காட்சியாக மட்டுமன்றி தேசிய வளர்ச்சிக்கான ஒரு இயக்கமாகத் திகழ்கிறது. EDEX Careers, EDEX Job Fair, EDEX Think Green, EDEX Sithuwam மற்றும் EDEX Nenapahana போன்ற திட்டங்கள் மூலம் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் நிலைபேறான வழிகாட்டலை வழங்குகிறது. இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, ஒருவரின் பலம் மற்றும் ஆர்வத்தை அடையாளம் காண உதவும் Career Key எனும் உளவியல் சோதனை (Psychometric test) வழங்கப்படுவதோடு, நிறைவான மற்றும் நோக்கத்தை அடையக் கூடிய தொழில் பயணங்களுக்கான ஆதரவையும் வழங்குகிறது.
EDEX Expo 2026 கண்காட்சியானது பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு, தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றுள்ளமையானது அதன் தேசிய ரீதியான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தொழில் வழிகாட்டல் சங்கம் போன்ற மூலோபாய கூட்டாளர்கள் இக்கண்காட்சியுடன் கைகோர்த்துள்ளமையானது, தொழில்துறையின் சீரமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளின் வெளியீட்டை வலுப்படுத்துகின்றது.
EDEX Nenapahana, முதன்மை சமூகப் பொறுப்புத் திட்டமான நெனபஹன, கிராமப்புற பாடசாலைகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்குதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நிறுவுதல் போன்ற சமூகப் பணிகளை முன்னெடுத்து வருவதன் மூலம் கல்வியின் நிலைபேறான அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதோடு, இலங்கை மாணவர்களை வலுவூட்டுகின்றது. அத்துடன் றோயல் கல்லூரி வைத்தியர்கள் சங்கத்துடன் இணைந்து அண்மையில், கெக்கிராவை கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் கேள்விப் புலன் குறைபாடுகளைக் கண்டறியும் மருத்துவ முகாமையும் நெனபஹன முன்னெடுத்திருந்து. இதன் மூலம் சிறந்த ஆரோக்கியம் பயனுள்ள கற்றலுக்கு ஒரு முக்கிய அடித்தளம் என்பதை அது எடுத்துக் கூறுகின்றது. அது மாத்திரமன்றி, இம்முறை கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள் தங்களது திறமைகளை நேரடியாக காண்பிக்கும் வகையிலான களிமண் மூலம் பாத்திரங்கள் செய்தல், சிற்பம் வடித்தல், வரைதல், திரை அச்சிடல் உள்ளிட்ட செயல்விளக்கங்கள் மூலம் மாணவர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு சிறப்பான முறையில் ஆதரவளிப்பதனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்லைன் செயலமர்வுகளைக் கொண்ட தொடர் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 03 ஆம் திகதி, குழந்தை நலன் மற்றும் முன்பராய மனநல மருத்துவர் பேராசிரியர் மியுரு சந்திரதாசவினால் முன்னெடுப்பட்ட இதன் ஆரம்ப செயலமர்வில் அதிகளவானோர் பங்கெடுத்து பலனடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் EDEX Sithuwam நிகழ்வானது, 2026 அகில இலங்கை சித்திரப் போட்டியின் ஊடாக படைப்பாற்றலை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து 10,000 இற்கும் மேற்பட்ட சித்திரங்கள் இதற்காக பெறப்பட்டதோடு, இப்போட்டியானது செவிப்புலன் குறைபாடுடையோருக்கான பிரத்தியேகப் பிரிவின் மூலம் அனைவரையும் உள்ளீர்க்கும் தன்மையை உறுதி செய்கிறது. இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்கினைப் பிரதிபலிக்கும் வகையில், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, EDEX சித்துவம் இரண்டாவது ஆண்டாக AI உதவியுடனான கலைப் போட்டியை நடத்துவதன் மூலம் பொறுப்பான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோடு, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் பசுமைப் பொருளாதாரத்தில் இளம் தொழில்முனைவோர் பங்கேற்பதனை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு, Think Green மற்றும் Entrepreneurship குழுக்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகின்றன. வணிக ஆலோசகர்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டை ஆதரிக்கும் அரச நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ISO ஆலோசகர்கள், ERP தீர்வு வழங்குநர்கள் ஒன்றிணைந்து, இலங்கை இளைஞர்கள் மற்றும் தற்போதுள்ள தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட வணிகக் கருத்துகளின் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், பங்கேற்பாளர்களை முழுமையான தொழில்முனைவு மேம்பாட்டுச் சுழற்சியின் (entrepreneurship development cycle) ஊடாக வழிநடத்துவார்கள்.
இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த EDEX தலைவர் மஹிந்த கலகெதர, இளம் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவுவதே EDEX இன் அடிப்படை நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் பொருத்தப்பாடு குறித்து கருத்து தெரிவித்த கருத்திட்டத் தலைவர் சுமேதா கருணாரத்ன, நீங்கள் O/L அல்லது A/L பயிலும் மாணவராகவோ, உங்கள் பிள்ளையை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தும் பெற்றோராகவோ அல்லது ஒரு புதிய வேலை மாற்றத்தை தேடுபவராக இருக்கலாம், EDEX உங்களுக்குப் பெறுமதியான நுண்ணறிவுகளையும், உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளையும் வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய கருத்திட்டச் செயலாளர் நதுன் ஹெட்டியாராச்சி, EDEX என்பது வெறுமனே ஒரு கண்காட்சி மாத்திரமல்ல; இது பார்வையாளர்களை ஒன்றிணைந்து கேள்வி கேட்கவும், அவர்களின் எதிர்காலம் குறித்துத் தெளிவான முடிவுகளை எடுக்கவும் ஊக்குவிப்பதனை அதிகாரமளிக்கும் தளமாகும் என்று கூறியுள்ளார்.
சரியான தகவல், வழிகாட்டல் மற்றும் தொடர்புகள் அவசியமான இந்த யுகத்தில், EDEX Expo 2026 கண்காட்சியானது தேடல், வளர்ச்சி, வலுவூட்டலுக்கான ஒரு விரிவான தளத்தை வழங்குகிறது. இந்த மாற்றத்தின் ஒரு அங்கமாக இருப்பதோடு, பிரகாசமான, உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய எதிர்காலத்தை நோக்கி உங்களது முதல் அடியை எடுத்து வையுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு, EDEX செயலகத்தை 011 309 1086 அல்லது 076 820 4975 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

