Jan 7, 2026 - 01:53 PM -
0
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இந்தச் செயன்முறையை விரைவாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் பின்னரும், இருதரப்பு கலந்துரையாடல்கள் மூலமாகவும், நிலுவையிலுள்ள கடன்களை மறுசீரமைப்பதன் ஊடாக இலங்கைக்கு கடன் நிவாரண நடவடிக்கையொன்றை வழங்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) அவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ள மதிப்பிடப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடிவதுடன், ஜேர்மன் அரசாங்கம் நீண்ட காலமாக வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.

