Jan 7, 2026 - 03:39 PM -
0
வயது முதிர்ந்த நபர்களுக்கான இல்லப் பராமரிப்பு செயற்பாடுகளை தமது இல்லங்களிலிருந்தவாறே சௌகரியமான முறையில் முன்னெடுப்பதற்கு குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், SLT-MOBITEL மற்றும் eChannelling PLC ஆகியன Golden Years Care இன் மருத்துவ பராமரிப்பு நிபுணர்களுடன் கைகோர்த்து ‘eHomecare’ எனும் இலங்கையின் முதலாவது வைத்தியர்-தலைமையிலான முதியோர் பராமரிப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளன.
இந்த முன்னோடியான செயற்பாடு, அதிகரித்துச் செல்லும் சமூக தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னோடியான சுகாதார பராமரிப்பு தீர்வுகள் வழங்குனரான eChannelling, SLT-MOBITEL இன் தொழில்னுட்ப ஆற்றல்களை eChannelling இன் சுகாதாரபராமரிப்பு நிபுணத்துவதுடன் இணைத்து, Golden Years Care இன் பரந்த இல்லம்-சார் பராமரிப்பு அனுபவத்தைக் கொண்டு தரமான சேவைகளை இந்த பராமரிப்பு சேவைகளில் வழங்க முன்வந்துள்ளது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்று புலம்பெயர்ந்து செல்லும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், தமது வயது முதிர்ந்த பெற்றோர்கள் இலங்கையில் தம் இல்லங்களில் தனித்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல சிரேஷ்ட பிரஜைகளுக்கு நடமாடல் சவால்கள் நிலவுவதுடன், தமது வழமையான பரிசோதனைகள், மருந்து பெறல் அல்லது அவசர மருத்துவ கண்காணிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. eHomecare இனால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில், கட்டமைக்கப்பட்ட, தங்கியிருக்கக்கூடிய மற்றும் அக்கறையான தீர்வு குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
eHomecare இன் நோக்கம், குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக அமைந்திருப்பதுடன், வயது முதிர்ந்தவர்களுக்கு அவசியமான மருத்துவ பராமரிப்பை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து, வெளிநாடுகளில் வதியும் அல்லது பணிபுரியும் பிள்ளைகளுக்கு தமது கடினமான வேலைப்பளு மத்தியில், தமது அன்புக்குரியவர்களின் தேவைகளை உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
eHomecare இனால் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான சேவைகள் உறுதி செய்யப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர் ஒருவர் இல்லங்களுக்கு விஜயம் செய்வது, உடனுக்குடன் ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் தகைமை வாய்ந்த சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் வழிகாட்டல்களை பெற்றுக் கொடுப்பது போன்றன உறுதி செய்யப்படுகின்றன. அதனூடாக, வயது முதிர்ந்தவர்களுக்கு உரிய பரந்த அரவணைப்பினூடாக ஆதரவளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
சௌகரியம் என்பதற்கு அப்பால், eHomecare என்பது அதிகளவு கரிசனைக்குரிய சமூகப் பிரச்சனைக்கான தீர்வாக அமைந்திருப்பதுடன், குடும்பங்களுக்கு மனநிம்மதியை வழங்கி, சிரேஷ்ட பிரஜைகளுக்கு அவசியமான நன்மதிப்பு கிடைப்பதையும், அவசியமான மருத்துவ கண்காணிப்பை பெற்றுக் கொள்வதையும் உறுதி செய்கிறது.
இந்த சேவையில் அடங்கியிருக்கும் முக்கியமான அங்கத்தில், வைத்தியர் தலைமையிலான குழுவினர் வீட்டு விஜயங்களை மேற்கொண்டு, பிரத்தியேகமான சேவைகளை வழங்குவது, சீரான சுகாதார முகாமைத்துவத்திற்கான தொடர்ச்சியான மதிப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகள், அவசர நிலைகளில் தகைமை வாய்ந்த சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் உதவியுடன் உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கான பராமரிப்புக்கான பரந்த, நிபுணத்துவ மற்றும் நம்பிக்கையான அரவணைப்பு வழங்கி, அவர்களின் நலன் உறுதி செய்யப்படுகிறது.
eHomecare ஊடாக, குடும்பங்களுக்கு, வயது முதிர்ந்தவர்களின் பிரத்தியேகமான தேவைகளை புரிந்து கொண்டு செயலாற்றும் நம்பிக்கையான மருத்துவ நிபுணர்களை அணுகும் வசதி கிடைக்கிறது. இந்த சேவையினால், வெளிநாடுகளில் வதியும் பிள்ளைகளுடன் காணப்படும் இடைவெளி இல்லாமல் செய்யப்படுவதுடன், உரிய மருத்துவ ஆதரவு மற்றும் உணர்வுபூர்வமான உறுதித் தன்மையையும் பெற்றுக் கொள்ளலாம்.

