Jan 7, 2026 - 03:49 PM -
0
சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை கடத்த முற்பட்ட போதே, விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நீர்கொழும்பு, குடாபாடுவ பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றை நடத்தி வரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இந்தப் போதைப்பொருளை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இந்தியாவிற்கு (புதுடெல்லி) கொண்டு வந்துள்ளார்.
அங்கிருந்து எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான AI 277 என்ற விமானம் மூலம் இன்று காலை 07:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் கார்பன் தாள்களினால் சுற்றப்பட்டு, 15 பொதிகளாக பொதியிடப்பட்டிருந்த நிலையில் இந்த 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் மொத்த நிறை 07 கிலோகிராம் 70 கிராம் ஆகும்.
போதைப்பொருள் பொதிகளுக்கு மேல் அதிகளவிலான இனிப்புப் பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் வசிக்கும் தமக்குத் தெரிந்த இலங்கை பெண் ஒருவரே, இதனை இலங்கைக்குக் கொண்டு செல்லுமாறு தம்மிடம் ஒப்படைத்ததாக சந்தேக நபர் சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

