Jan 8, 2026 - 08:48 AM -
0
திட்டமிட்டபடி, ஜனவரி 9- ஆம் திகதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், ஒன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் இருந்து விஜயின் 'ஜனநாயகன்' படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் இயக்கத்தை வழிநடத்தி வரும் அவர், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.9 ஆம் திகதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால், இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று புதன்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9 ஆம் திகதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9-ஆம் திகதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எளிதானதல்ல. திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை பொறுமை காத்து தொடர்ந்து ஆதரவு தருமாறு ரசிகர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.
இதனிடையே, புக் மை சோ, டிக்கெட் நியூ, டிஸ்டிரிக் ஆப் உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் இருந்து விஜயின் 'ஜனநாயகன்' படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில், படத்திற்கான 'புக் டிக்கெட்டுகள்' விருப்பம் இனி என புக் மை சோ (BookMyShow) தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

