Jan 8, 2026 - 11:14 AM -
0
தித்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தாருக்கு உதவும் வகையில், SLT- MOBITEL இடமிருந்து இலவச ‘247 Helpline’ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, எந்நேரமும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உடனடி ஆதரவுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையினூடாக, அழைப்பை மேற்கொள்பவர்களை, 24/7 நேரமும் சேவையிலிருக்கும் மருத்துவ நிபுணர்களுடன் இணைத்து, அவசியமான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தம் காரணமாக காயங்கள், காய்ச்சல், நீர்சார்ந்த நோய்கள், மூச்செடுப்பதில் சிரமம் அல்லது இதர ஏதேனும் சுகாதார பிரச்சனைகளுக்கு எவரேனும் முகங்கொடுப்பார்களாயின், 247 எனும் இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சகல வலையமைப்புகளையும் சேர்ந்த மொபைல் பாவனையாளர்களுக்கு இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், பரந்தளவு சென்றடைவு மற்றும் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில் SLT- MOBITEL, அவசியமான தருணங்களில் இலங்கையர்களுக்கு ஆதரவை வழங்க தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளது. குறிப்பாக, அனைவரின பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இணைப்பில் இருப்பதற்கும் ஆதரவளிக்கிறது. புயலின் கொடூரமான பாதிப்புகளிலிருந்து நாடு மீண்டெழுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும் வேளையில், SLT-MOBITEL இனால் அத்தியாவசிய தொடர்பாடல் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கப்படுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதனூடாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்ற பங்காளர் எனும் வகையில் அவர்களுடன் இணைந்துள்ளது.
அனைத்து இலங்கையர்களையும் அவதானத்துடன் இருப்பதுடன், சமூகமாக ஒன்றிணைந்திருக்குமாறு SLT-MOBITEL வலியுறுத்துவதுடன், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியை இணைந்து கடக்கும் வேளையில், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

