Jan 8, 2026 - 07:51 PM -
0
புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முற்படும்போது ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவின் வைத்தியர் கனிந்து மாதவ தெரிவிக்கையில்,
20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இத்தகைய விபத்துக்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து வைத்தியர் கனிந்து மாதவ மேலும் கூறியதாவது,
கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் தமது பழக்கப்பட்ட கையின் விரல் நுனிகளில் பலத்த சேதங்களுடனும் காயங்களுடனும் அடிக்கடி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வருவதை நாம் அவதானித்தோம்.
இது குறித்து ஆராய்ந்தபோது, இக்காயங்கள் ஏற்படுவதில் ஒரு குறிப்பிட்ட தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தோம்.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் தமது புதிய மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை சுத்தம் செய்ய முயன்றபோதே இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளன.
மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் சங்கிலிகளைச் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றன. ஆனால், இவர்கள் மோட்டார் சைக்கிளின் இன்ஜினை முதலாம் கியரில் முடுக்கியவாறே வெறும் கையால் பாதுகாப்பற்ற முறையில் சங்கிலியைத் துடைக்க முற்படுகின்றனர்.
பொதுவாக அவர்கள் பருத்தித் துணியைப் பயன்படுத்தியே சுத்தம் செய்கின்றனர். அப்போது அந்தத் துணி சங்கிலியில் சிக்கிக்கொள்ள, அதனோடு சேர்த்து கையும் உள்ளிழுக்கப்பட்டு பலத்த காயங்கள் ஏற்படுகின்றன.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், ஒருவரது பிரதானமான அல்லது பழக்கப்பட்ட கையின் முதல் மூன்று விரல்களே இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
அதனை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போதிலும், அதனை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது.
எனவே அவ்வாறான பணிகளின் போது, இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன், கைகளுக்கு பாதுகாப்பான கையுறைகளை அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவித்தார்.

