Jan 9, 2026 - 07:22 PM -
0
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--

