Jan 10, 2026 - 07:00 PM -
0
தளபதி விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' வெளியீட்டில் நீடிக்கும் சிக்கல் காரணமாக, படத் தயாரிப்பு நிறுவனம் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான காலவரிசை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவின் தேர்வுக் குழு, சில காட்சிகளை நீக்கிவிட்டு 'U/A 16+' சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது.
ஆனால், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், ஆயுதப் படைகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் கூறி ஒரு முறைப்பாடு வந்ததால், தணிக்கை வாரியத் தலைவர் படத்தை மீண்டும் மறுஆய்வு குழுவிற்கு அனுப்ப உத்தரவிட்டார். இதனால் ஜனவரி 9-ம் திகதி திட்டமிடப்பட்ட வெளியீடு தடைபட்டது.
இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூடுபிடித்தது.
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9-ம் திகதி (வெள்ளிக்கிழமை) காலையில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கினார். அதில், "முறைப்பாடு என்பது உள்நோக்கம் கொண்டது" எனக் கூறிய நீதிபதி, மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, உடனடியாகப் படத்திற்குச் சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது விஜய்யின் ரசிகர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.
தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தணிக்கை வாரியம் உடனடியாக அன்றைய தினமே (ஜனவரி 9) அவசர அவசரமாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. "தணிக்கை வாரியம் பதிலளிக்கப் போதுமான அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்றும், "வெளியீட்டுத் திகதியை வைத்து நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடையால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகைக்குப் படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனம், தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
உயர் நீதிமன்ற அமர்வு விதித்த தடையை நீக்கி, படத்தை உடனடியாக வெளியிட அனுமதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து அனுமதி அளித்தால் மட்டுமே, வரும் ஜனவரி 14-ம் திகதி (பொங்கல்) படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் #WeStandWithThalapathy போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

