Jan 11, 2026 - 07:21 AM -
0
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
'ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்' (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் எப்-15 (F-15), ஏ-10 (A-10) போர் விமானங்கள், ஏசி-130 (AC-130) கன்ஷிப் விமானங்கள் மற்றும் எம்.க்யூ-9 (MQ-9) ட்ரோன்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. ஜோர்டான் நாட்டு விமானப்படையின் எப்-16 விமானங்களும் இதில் பங்கெடுத்துள்ளன.
கடந்த மாதம் (டிசம்பர் 13, 2025) சிரியாவின் பால்மைரா பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024 டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

