Jan 11, 2026 - 07:57 AM -
0
எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok AI சாட்போட்டிற்கு இந்தோனேசியா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. ஒரு நாடாக இந்தச் செயலிக்கு முழுமையாகத் தடை விதித்த முதல் நாடு இந்தோனேசியாவாகும்.
Grok AI சாட்போட்டைப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்ற (Deepfake) முடியும் என்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, சாதாரண புகைப்படங்களைக் கூட அரை குறை ஆடைகளுடன் இருப்பது போல் மாற்றும் அம்சம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறுவர்களின் புகைப்படங்களும் முறைகேடாகச் சித்திரிக்கப்படுவதாகப் முறைப்பாடுகள் எழுந்தன.
Grok சாட்போட்டில் இவ்வாறான தவறான உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை என இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒருவரின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றுவது மனித உரிமை மற்றும் தனிநபர் கௌரவத்தைச் சீர்குலைக்கும் செயல் என இந்தோனேசிய அமைச்சர் மியுத்யா ஹபீத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்டி, ஜனவரி 10, 2026 முதல் இந்தோனேசியாவில் Grok AI சாட்போட்டிற்கான அணுகல் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு xAI நிறுவனம் "பாரம்பரிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன" எனத் தானியங்கி முறையில் பதிலளித்துள்ளது. இருப்பினும், போலி உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மஸ்க் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் Grok AI இன் இந்தச் செயல்பாடு குறித்துக் கவலை வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

