உலகம்
ஈரானில் 14வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் பலி

Jan 11, 2026 - 12:17 PM -

0

ஈரானில் 14வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் பலி

ஈரானின் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கடந்த வாரம் ஆரம்பமான மக்கள் போராட்டம் தொடர்ந்து 14வது நாளாகவும் நீடித்து வருகிறது. 

 

அந்நாட்டின் 180 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பரவியுள்ள இந்த வன்முறைப் போராட்டங்கள் காரணமாக, இதுவரை குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

உயிரிழந்தவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2,600க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைப் பாதுகாப்புத் தரப்பினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

 

போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபட்டு வருவதுடன், நாடு முழுவதும் இணையச் சேவைகளும் இன்னும் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. 

 

இத்தகைய பின்னணியில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கருத்துத் தெரிவிக்கையில், "போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் நோக்கம் அமெரிக்காவை மகிழ்விப்பதே ஆகும். இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் 'கடவுளின் எதிரியாக'   கருதப்படுவார்கள். இது மரண தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றமாகும்" என எச்சரித்துள்ளார். 

 

ஈரானை ஸ்திரமற்றதாக்கும் அமெரிக்காவின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஈரான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. 

 

இதற்கிடையில், அரச எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்தவர்களால் தெஹ்ரான் நகரின் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

தற்போதைய சூழ்நிலையில் அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெஹ்ரான் சுகாதாரத் துறையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05