Jan 13, 2026 - 12:31 PM -
0
கொமர்ஷல் வங்கியானது ‘ஒன்றிணைவோம் மீளுருவாக்குவோம்’ (‘Rebuild Together’) எனும் தனது முயற்சியின் கீழ் டித்வா புயலானது ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பின்னரான மீண்டெழும் நடவடிக்கைகளை ஆதரித்து, எதிர்கால பேரழிவு இடர்களை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமான இடர் முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) நிர்வகித்து வரும் இடர் தகவல் இடஞ்சார்ந்த தரவு நுழைவாயிலை (RiskInfo Spatial Data Portal) முழுமையாக புதுப்பித்து மேம்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்குவதன் மூலம், நாட்டின் பேரிடருக்கான தயார்நிலையை ஏற்படுத்தவும் மற்றும் இடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்தவும் முன்வந்துள்ளது.
டித்வா புயல் அனர்த்தமானது வலுவான, நவீன மற்றும் எளிதில் அணுகக்கூடிய இடர் தொடர்பான தகவல் முறைமைகள் அவசியம் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது. இலங்கையின் இடர் முகாமைத்துவத்திற்கான தேசிய நிலையமாக செயல்படும் இடர் முகாமைத்துவ நிலையம், தயார்நிலை, பதிலடி நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு ஆதரவாக RiskInfo Spatial Data Portal மற்றும் DesInventar தரவுத்தளம் போன்ற தளங்கள் செயல்படுகின்றன. இத்தளங்களில் பல்வேறு பேரழிவுகளை உள்ளடக்கிய அபாய வரைபடங்கள், பாதிப்பிற்குள்ளாகும் நிலை மற்றும் வெளிப்பாடு தொடர்பான தரவுகள், மேலும் கடந்தகால பேரழிவுகளால் ஏற்பட்ட இழப்புகளின் வரலாற்றுத் தகவல்கள் ஆகியவை சேமிக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் பிரதம இடர் அதிகாரி திரு கபில ஹெட்டிஹமு தெரிவிக்கையில்:
டித்வா புயலானது, இலங்கை அதிகமாக சிக்கலானதும் பரவலானதுமான காலநிலை மற்றும் பேரழிவு அபாயங்களை எதிர்கொண்டு வருவதை வலியுறுத்தி நினைவூட்டியது. ஒரு முன்னணி நிதி நிறுவனமாக, எமது பொறுப்பு நெருக்கடிகளுக்குப் பதிலளிப்பதோடு மட்டும் அல்லாமல், அவற்றுக்கான தயார்படுத்துதலை நாட்டிற்கு உருவாக்க உதவுவதையும் உள்ளடக்கியதாகும் என நாம் நம்புகிறோம். எதிர்வினை அடிப்படையிலான மீட்பு நடவடிக்கைகளிலிருந்து முன்நோக்கிய, தரவு சார்ந்த பேரழிவு இடர் முகாமைத்துவத்திற்கு தேசத்தை மாற்றும் நோக்கில், இந்த மேம்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக இடர் முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) நாம் இணைந்து செயற்பட்டுள்ளோம்.
கொமர்ஷல் வங்கியின் இந்த முக்கியமான ஒத்துழைப்பானது, இடர் முகாமைத்துவ நிலைய (Disaster Management Centre – DMC) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்வில், மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவெகொட (ஓய்வு) (ndc, IG), பணிப்பாளர் நாயகம் – DMC; திருமதி அனோஜா செனெவிரத்ன, தடுப்பு, ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் – DMC; கொமர்ஷல் வங்கியின் பிரதம இடர் அதிகாரி திரு கபில ஹெட்டிஹமு; வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள்; மேலும் வங்கியின் நிலைத்தன்மைத் துறை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், ளுஆநு துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

