Jan 13, 2026 - 01:18 PM -
0
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது.
இதன் மூலம் டித்வா சூறாவளி நிவாரணத்திற்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூறாவளி கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களிற்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி அமைகிறது. இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகச்சரியான நேரத்தில், செயற்திறனுடைய உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இலங்கையர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது அமெரிக்கா உதவி செய்தது.” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.
“போர்த் திணைக்களம் வழங்கிய வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் நிபுணத்துவங்கள் முதல் மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்ட 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு முக்கியமான இந்தோ - பசிபிக் பங்காளரான இலங்கை, டித்வா சூறாவளியின் தாக்கங்களிலிருந்து மீட்சியடைந்து முன்னோக்கிச் செல்வதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.
இது போன்ற பேரனர்த்தங்கள் சமூகங்களையும் வாழ்வாதாரங்களையும் சீர்குலைக்கின்றன. மக்களும் பொருளாதாரங்களும் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான ஸ்திரத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையின் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் மற்றும் மத்திய மாகாணத்திலுள்ள தோட்டப்புறங்களில் (எஸ்டேட்களில்) வாழும் சமூகங்களிலும் மேற்கொள்ளப்படும் நிவாரண மற்றும் ஆரம்பகால மீட்புப் பணிகளுக்கு அமெரிக்க உதவிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவசர உணவு மற்றும் சமையலறை உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பாவனைப் பொருட்களை உள்ளடக்கிய பொதிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மணல் மூட்டைகளை அமைப்பதற்கான சாக்குப்பைகள் போன்ற வெள்ளத்தைத் தணிப்பதற்கான பொருட்கள் என்பன இவ்வுதவிகளுள் உள்ளடங்குகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் சுத்தமான குடிநீரை அணுகுவதற்கும், தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தினை வழங்குவதற்கும், மற்றும் தங்குமிடங்களில் பாதுகாப்பான மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு உகந்த இடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இவ்வுதவிகள் பங்களிப்புச் செய்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மற்றும் தோட்டப்புறப் (எஸ்டேட்) பகுதிகளில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதன் மூலமும், வடிகாலமைப்பு வசதிகள் மற்றும் சிறிய அளவிலான நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், குடும்பங்கள் உள்ளூர் உணவுற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வண்ணம் வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் மூலமும் சமூகங்கள் இப்பேரனர்த்தத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் பங்களிப்புச் செய்கின்றன.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகள் விரைவாகவும், செயற்திறனுடனும், கணக்குக்காட்டும் பொறுப்புடனும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் வேர்ல்ட் விஷன் போன்ற நம்பகமான அமைப்புகள் அமெரிக்காவின் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.
டித்வா சூறாவளியினைத் தொடர்ந்து உருவாகி வரும் தேவைகளை இலங்கை தொடர்ந்து மதிப்பீடு செய்கையில், உருவாகி வரும் முன்னுரிமைகளுக்கு உதவி செய்வதற்கான வழிகளை ஆராய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

