Jan 13, 2026 - 02:34 PM -
0
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால், 30 வருடங்களுக்குப் பிறகு டேவிட் பாம் (பண்ணை) மற்றும் ஹட்டன் ஆகியவற்றுக்கு இடையிலான, போடைஸ் வழியான பொதுப் போக்குவரத்து சேவை இன்று (13) காலை 6:20 மணிக்கு பௌத்த மத அனுஷ்டானங்களுடன் டேவிட் பாம் பகுதியிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான இந்தப் பஸ், இரண்டு தடவைகள் டேவிட் பாம் பகுதியிலிருந்து டயகம, அக்கரப்பத்தனை, மன்ராசி ஊடாக ஹட்டனைச் சென்றடையும். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை இப்பேருந்து சேவையினை ஹொயிஸ் லைன், சந்திரகாமம், யரவல் மற்றும் டேவிட் பாம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தப் பஸ் சேவை நிறுத்தப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
கடந்த கால ஆட்சியாளர்களிடம் இது குறித்து பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நிறைவேற்றப்படவில்லை. தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவ வீரர்கள், பிரஜாசக்தி அதிகாரிகள் மற்றும் ஹட்டன் டிப்போ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
--

