Jan 14, 2026 - 10:30 AM -
0
தகவல்களைத் தேடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக TikTok இன் தேடல் (search) வசதி இன்று உருவெடுத்துள்ளது. புதிய சிந்தனைகளை ஆராய்வதற்கும், அன்றாட வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், தங்களுக்குத் தேவையான உத்வேகத்தைப் பெறுவதற்கும் மில்லியன் கணக்கானோர் இத்தளத்தை நாடுகின்றனர். குறிப்பாக, தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய மையமாக இன்று TikTok மாறியுள்ளது.
தகவல்களைத் தேடுவதில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றத்தின் பிரதிபலிப்பாக, TikTok இன்று ஒரு வீடியோ வழித் தேடுபொறியாக (Video-first search engine) உருவெடுத்துள்ளது. குறிப்பாக, சிக்கலான விடயங்களை காட்சி வடிவில் விரைவாகப் புரிந்துகொள்ள விரும்பும் பயனர்கள் இத்தளத்தையே அதிகம் நாடுகின்றனர். பரீட்சைக்குத் தயாராகுதல், சுற்றுலாத் திட்டமிடல் போன்ற அன்றாடத் தேவைகள் முதல், முக்கியச் செய்திகள் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது வரை அனைத்தையும் நேரடித் தரவுகளாக மக்கள் இங்கு தேடுகின்றனர். ஒரு விடயத்தைப் வெறும் தகவலாகப் பார்ப்பதை விட, ஒரு படைப்பாளரின் நேரடி அனுபவத்தின் ஊடாகப் பார்க்கும்போது அது யதார்த்தமாகவும், எளிதில் புரியக்கூடியதாகவும் இருப்பதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.
இலங்கையில் TikTok இன்று வெறும் பொழுதுபோக்குத் தளம் என்ற நிலையைக் கடந்து ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. அதன் தேடல் வசதியானது, மக்களின் தேடல் ஆர்வத்தையும் அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு துடிப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான காட்சி ஊடகமாக மாறியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் கல்வி, கலாச்சாரம், உணவு, பயணம், அழகுக்கலை மற்றும் அன்றாட வாழ்க்கை முறை சார்ந்த தேடல்கள் இலங்கையில் கணிசமாக அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி, செய்திகளுக்கான எளிய விளக்கங்களையும், எவ்வாறு செய்வது? (How-to) போன்ற வாழ்வியல் வழிகாட்டல்களையும் கண்டறியும் முக்கிய இடமாக இது உருவெடுத்துள்ளது. மக்கள் புதியவற்றைக் கற்கவும், உலக நடப்புகளைப் புரிந்துகொள்ளவும், சமூகத்துடன் ஒன்றிணையவும் TikTok-ஐ ஒரு தவிர்க்க முடியாத கருவியாகப் பயன்படுத்துவதை இந்த மாற்றம் தெளிவாக உணர்த்துகிறது.
TikTok பயனர்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் சந்தேகங்களுக்கு விடை காணவும், புதிய விடயங்களை ஆராயவும் இத்தளத்தை ஒரு தேடல் ஊடகமாகப் பயன்படுத்துவது அண்மைக்காலத் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டு காலத்தில், சுற்றுலா, சமையல் கலை, கல்வி மற்றும் உடற்தகுதி சார்ந்த உள்ளடக்கங்களுக்கான தேடல்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது பயனர்கள் தகவல்களையும் புதிய உந்துதல்களையும் (Inspiration) தேடும் முறையில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பயணத்தைத் திட்டமிடுவது, புதிய உணவு வகைகளைக் கண்டறிவது முதல் கல்வி, சுய முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என அனைத்துத் தேவைகளுக்கும் மக்கள் இன்று TikTok-ஐ நாடுகின்றனர். தங்களின் தேடல் ஆர்வத்திற்கும் அன்றாடத் தேவைகளுக்கும் பொருத்தமான உள்ளடக்கங்களை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நம்பகமான தளமாக TikTok இன்று உருவெடுத்துள்ளது.
இதுதொடர்பில் TikTok நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உள்ளடக்கச் செயற்பாட்டுத் தலைவர் உமைஸ் நவீட் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள எமது பயனர்கள் ஏதேனும் ஒரு புதிய விடயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவோ, ஒரு தகவலை விரைவாகப் புரிந்துகொள்ளவோ அல்லது உண்மையான மனிதர்களின் அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெறவோ விரும்பும்போது, TikTok-இன் தேடல் வசதியையே (Search feature) தங்களின் முதன்மையான தெரிவாகக் கொள்கின்றனர். பயனர்களின் உண்மையான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையே TikTok-ஐ ஏனைய தளங்களிலிருந்து தனித்துவமாக்கிக் காட்டுகிறது. இங்குள்ள உள்ளடக்கங்கள் மனித உணர்வுகளோடும், நடைமுறை அனுபவங்களோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. இதனால், மக்கள் வெறும் தகவல்களைத் திரட்டுவதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. மாறாக, தாங்கள் நம்பக்கூடிய மற்றும் தங்களுக்குப் பொருத்தமான கருத்துக்களோடு ஒன்றிணைவதற்காகவே இத்தளத்தின் தேடல் வசதியைப் பயன்படுத்துகின்றனர்.” என்றார்.
பாதுகாப்புடன் கூடிய தகவல் தேடல்: TikTok-இன் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் TikTok தேடல் வசதியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் பாதுகாப்பான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய முறையில் தகவல்களைத் தேடுவதை உறுதி செய்வதில் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தேடல் இடையீடுகள் (Search Interventions) எனும் விசேட பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் ஏதேனும் சிக்கலான அல்லது அபாயகரமான தலைப்புகளைத் தேடும்போது, இந்த வசதி அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டல்களையும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான தகவல்களையும் தானாகவே வழங்குகிறது. பயனர்கள் தேடும் விடயத்தைப் பொறுத்து, பின்வரும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் அவர்களுக்குக் காண்பிக்கப்படும்:
* மனநல ஆதரவு: உள்ளூர் அவசர உதவி இலக்கங்கள் மற்றும் மனநல மேம்பாடு குறித்த வழிகாட்டல்கள்.
* அவசரகால வழிகாட்டல்: இயற்கை பேரிடர்கள் அல்லது விரைவாக மாறிக்கொண்டிருக்கும் அவசர சூழ்நிலைகள்
* தவறான தகவல்களைத் தடுத்தல்: போலியான தகவல்கள் குறித்து எச்சரிப்பதோடு, நம்பகமான மூலங்கள் மூலம் தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஊக்குவித்தல்.
* சமூக விழிப்புணர்வு: துன்புறுத்தல், வன்முறை அல்லது பொதுப் பாதுகாப்பு தொடர்பான உணர்வுபூர்வமான விடயங்கள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்.
இலங்கையில் TikTok பயனர்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை (Digital Well-being) மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு தேடல் பாதுகாப்பு (Search Interventions) அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கட்டான காலப்பகுதிகளில் பயனர்கள் நம்பகமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் ஒரு கட்டமாக, பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் விசேட தேடல் வழிகாட்டி (Search Guide) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாலியல் வன்முறை தொடர்பான சொற்களை எவரேனும் தேடும்போது, செயலிக்குள்ளேயே ஒரு விசேட அறிவிப்புப் பதாகை (Banner) தோன்றும். இது பயனர்களை இலங்கையின் உள்ளூர் அவசர உதவி எண்கள் மற்றும் TikTok பாதுகாப்பு மையத்திலுள்ள (Safety Center) உதவிப் பக்கங்களுக்கு நேரடியாக வழிப்படுத்தும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தகுந்த ஆலோசனைகளையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இடர்களைக் கருத்திற்கொண்டு, பயனர்களுக்குச் சரியான நேரத்தில் நம்பகமான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்ய பேரிடர் காலத் தேடல் வழிகாட்டல்களை (Safety Center) TikTok செயற்படுத்தியுள்ளது. அதேபோன்று, தேசியத் தேர்தல்களின் போது தகவல்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான விசேட நடைமுறைகளையும் அது முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் போது, பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்தல் தகவல் மையங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவற்றுடன் தேடல் வழிகாட்டிகள் மற்றும் காணொளி அறிவிப்புக் குறிகள் (Video notice tags) மூலம், தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களை மக்கள் பொறுப்புணர்வுடன் அணுகவும், குடிமைசார் கடமைகளில் விழிப்புணர்வுடன் ஈடுபடவும் வழிவகை செய்யப்பட்டது. இலங்கை பயனர்களுக்குப் பாதுகாப்பான, தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமானதொரு டிஜிட்டல் சூழலை உறுதி செய்வதில் TikTok கொண்டுள்ள அர்ப்பணிப்பையே இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகள் பறைசாற்றுகின்றன.
“TikTok-இன் தேடல் வசதியானது அதன் வடிவமைப்பிலேயே பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் (Safety-by-design) கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது” என TikTok நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர் அஸ்மா அஞ்சும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எமது தேடல் இடையீடுகள் எனும் பாதுகாப்பு அம்சம், ஒரு பயனர் உதவியை நாடும்போதோ அல்லது ஏதேனும் ஒரு உணர்வுபூர்வமான விடயத்தைத் தேடும்போதோ, அவருக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த வழிகாட்டல்கள் பயனரின் நலன், தகவலின் துல்லியம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார்.
தெற்காசியாவில் தகவல் தேடலின் எதிர்காலம்
தகவல்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளும் ஒரு முதன்மைத் தளமாக TikTok உருவெடுத்து வருவது, தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. மக்கள் இன்று தகவல்களைக் காட்சி வடிவில், எளிமையாகவும், நம்பகத்தன்மையுடனும் பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றனர். புதிய ஆர்வங்களைத் தேடுவதாக இருக்கட்டும், பரீட்சைக்குத் தயாராகுதல், சுற்றுலாத் திட்டமிடல், கிரிக்கெட் குறித்த உரையாடல்கள் அல்லது வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் என எதுவாக இருந்தாலும், TikTok இன்று ஒரு தவிர்க்க முடியாத களமாக மாறியுள்ளது. குறிப்பாக, தங்களின் சொந்த மொழியில் பேசும், தங்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாளர்களுடன் தங்களை இணைத்துக்கொள்ள முடிவதே பயனர்கள் இத்தளத்தை அதிகம் நேசிப்பதற்குக் காரணமாகும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் தயாரிப்பு கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் பங்களிப்புகளை மேம்படுத்துவதில் TikTok தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது. அந்த வகையில், பயனர்கள் புதிய உள்ளடக்கங்களைக் கண்டறியவும், தங்களின் அறிவை விரிவுபடுத்திக்கொள்ளவும், சமூகத்துடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இத்தளத்தின் தேடல் வசதி ஒரு பிரதான தூணாகத் தொடர்ந்து விளங்கும்.

