Jan 14, 2026 - 11:49 AM -
0
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி (CCS) தனது வர்த்தகநாமத்தை சர்வதேச அளவில் விஸ்தரிக்கும் தைரியமான முயற்சியாக அமையும் வகையில், மிகவும் பிரபலமான எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீமை அவுஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 4 அன்று Novotel Melbourne Glen Waverley ல் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு இடம்பெற்றதுடன், இதனைக் கொண்டாடும் வகையில் தொழில்துறை தலைவர்கள், உள்ளூர் விநியோகத்தர்கள், மற்றும் மூலோபாய கூட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றுகூடியிருந்தனர். இலங்கையின் துணைத் தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதீபா சேரம், அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கசான்ட்ரா பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இது அறிமுகப்படுத்தப்பட்டமை நிகழ்வின் கௌரவத்தை சிறப்பித்துள்ளதுடன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆழமான மற்றும் வளர்ச்சி கண்டு வருகின்ற பிணைப்புக்களை பிரதிபலிக்கின்றது.
வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கை சமூகங்கள் மத்தியில் மிகவும் ஆழமாகத் தொடர்புபட்டுள்ள இலங்கை வர்த்தகநாமங்களில் ஒன்றாக எலிபன்ட் ஹவுஸ் காணப்படுவதுடன், மாலைதீவு, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 16 நாடுகளில் இது கிடைக்கப்பெறுகின்றது.
நிறுவனத்தின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமையும் வகையில், அவுஸ்திரேலியாவிலுள்ள சமூகங்கள் மத்தியில் இது தாராளமாகக் கிடைக்கப்பெறுவதற்கு உதவுவதற்காக, எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் தற்போது மெல்பேர்ணில் தயாரிக்கப்படுகின்றது. 500மிலீ பொதிகளில் வெனிலா, கறுத்த கொழும்பான், மற்றும் ஃபுருட் அன்ட் நட் உள்ளிட்ட தயாரிப்பு வரிசை தற்போது கிடைக்கப்பெறுகின்றது. CCS ன் 150 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் இலங்கைக்கு வெளியில் தயாரிக்கப்படுகின்ற நிகழ்வாக இது மாறியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள அதன் வர்த்தக கூட்டாளர்களில் ஒன்றான Millennium Imports Pty Ltd நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இந்நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சிப் பயணத்தில் புதியதொரு சகாப்தத்தின் அடையாளத்தை இது குறித்து நிற்கின்றது.
“அவுஸ்திரேலிய சந்தையில் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீமை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,” என்று ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் குறிப்பிட்டார். “இந்த அறிமுகமானது விரிவாக்க முயற்சி என்பதற்கும் அப்பாற்பட்டது, இலங்கை மக்களின் நம்பிக்கையையும், நேசத்தையும் வென்றுள்ள வர்த்தகநாமமொன்றை மிகவும் பொருத்தமான கூட்டாளர்கள் மற்றும் மிகச் சரியான நீண்ட கால இலட்சியம் ஆகியவற்றுடன் வெளிநாடுகளிலுள்ள பரந்த சமூகங்கள் மத்தியில் கிடைக்கச்செய்யும் ஒரு முயற்சியாகும்.”
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் நிறுவனத்தின் உணவுகள் துறையின் தலைமை அதிகாரியும், ஏற்றுமதிகளுக்கான வர்த்தக தலைமை அதிகாரியுமான சதீஷ் ரத்நாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எலிபன்ட் ஹவுஸ் தயாரிப்புக்களுக்கு ஏற்கனவே சர்வதேச சந்தையில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதுடன், பரந்த வகைப்பட்ட எமது தயாரிப்புக்கள் கிடைக்கப்பெறும் ஒரு நாடு என்ற வகையில் தற்போது அடுத்த கட்டமாக அவுஸ்திரேயாவிலும் நாம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. கிடைக்கப்பெறுவதை அதிகரிக்கச் செய்து, இலங்கை சமூகத்தையும் தாண்டி ஏனைய சமூகங்கள் மத்தியிலும் பரிச்சயமான ஒரு தயாரிப்பாக வளரச் செய்து, பரிணமித்து வருகின்ற நுகர்வோரின் விருப்புவெறுப்புக்களுக்கு ஏற்றவாறு காலப்போக்கில் இத்தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது.”
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் சர்வதேச சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி சுதந்த விக்டோரியா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “CCS மற்றும் எலிபன்ட் ஹவுஸ் ஆகிய இரண்டுக்குமே பெருமைமிக்க சாதனை மைல்கல்லாக இது மாறியுள்ளது. இலங்கைக்கு வெளியில் முதல்முறையாக ஐஸ்கிறீமை தயாரிப்பது மிகப் பாரிய செயல்பாட்டு மற்றும் வர்த்தகநாம சாதனையாக மாறியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள எமது கூட்டாளர்களின் ஒத்துழைப்பினூடாகவே இது சாத்தியமாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் எமது விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, அங்கு அபிமானம் பெற்ற தெரிவாக எலிபன்ட் ஹவுஸ் மாறுவதற்கு உதவும் முகமான புதிய சுவைகள் மற்றும் வடிவங்களை அறிமுகப்படுத்துவதில் நாம் தற்போது கவனம் செலுத்தியுள்ளோம்.”
காலத்தால் அழியாத ஈர்ப்புடன், சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற இலங்கை வர்த்தகநாமமாக எலிபன்ட் ஹவுஸ் நிலைபெறுவதை வலுப்படுத்துவதற்காக, அவுஸ்திரேலியாவில் தற்போது கிடைக்கும் பிரதான தயாரிப்பு வரிசைக்குப் புறம்பாக ஏனைய தயாரிப்பு வரிசைகளையும் அங்கு அறிமுகப்படுத்தி, ஏனைய பிரபலமான சுவைகள் மற்றும் வடிவங்களையும் அறிமுகப்படுத்தும் முற்போக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு CCS திட்டமிட்டுள்ளது.

