Jan 14, 2026 - 05:11 PM -
0
கொட்டகலையில் நேற்று (13) நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது, அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு போலிப் போராட்டமாகும் எனத் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து, இன்று (14) ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"லொப்கில் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 21 பேருக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 பேருக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி அரசியல் இலாபத்திற்காக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது" என்று குற்றம் சுமத்தினர்.
கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவி யாகுலமேரி இது குறித்துக் தெரிவிக்கையில்,
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனக் கூறி, முன்னாள் உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தியுள்ளார். இது முற்றிலும் பொய்யானது. ஏற்கனவே 24 பேருக்குப் பணம் கிடைத்துள்ளது, ஏனையோருக்கு ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தெரிந்துகொண்டே அரசியல் இலாபம் தேட அவர் போராட்டத்தை நடத்தியுள்ளார் என தெரிவித்தார்.
--

