Jan 15, 2026 - 11:01 PM -
0
2050 ஆம் ஆண்டளவில் பூச்சிய நிகர கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, தனியார் நிறுவனமொன்றினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவோட் கொள்ளளவு கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' காற்றாலை மின்நிலையம் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
'மன்னார் விண்ட்ஸ்கேப்' காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் எரிசக்தி வரலாற்றில் முதல் முறையாக, ஒரு இயந்திரத்தின் கொள்ளளவு 05 மெகாவாட் கொண்ட இலங்கையில் நிறுவப்பட்ட மிகப்பெரிய 4 காற்றாலை இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
இலங்கை வரலாற்றில் அரச அல்லது தனியார் துறையின் கீழ் 5 மெகாவோட் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்ட முதலாவது காற்றாலை மின் திட்டம் இதுவாகும் என்பதுடன், முழுமையான உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மின் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றதுடன், காற்றாலை இயந்திரங்களை இயக்கி வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

