உலகம்
அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

Jan 16, 2026 - 07:09 AM -

0

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். 

அந்தப் பதக்கத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை. 

இந்தச் சந்திப்பு "மிகச்சிறப்பாக" அமைந்ததாகக் குறிப்பிட்ட மச்சாடோ, வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக டிரம்ப் மேற்கொண்ட அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இதனைச் செய்ததாக மச்சோடா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

தனது நாட்டின் எதிர்கால திசையைத் தீர்மானிப்பதில் செல்வாக்கைப் பெறுவதற்கான மச்சாடோவினுடைய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. 

கடந்த மாதம் மச்சாடோவிற்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு, டிரம்ப் வெளிப்படையாகவே அந்தப் பரிசுக்காகத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். 

மச்சாடோ தனது பதக்கத்தை டிரம்ப்பிற்கு அளித்திருந்த போதிலும், அது நோபல் பரிசு வழங்கலின் விதிமீறலாக பார்க்கப்படுகின்றது. 

நோபல் பரிசை பெறும் நபர் அதனை வேறொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று நோர்வே நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்புக்கும், மச்சாடோவுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

குறித்த இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும். 

இந்தச் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், மச்சாடோவைச் சந்திக்க டிரம்ப் ஆவலுடன் இருந்ததாகவும், அதே சமயம் குறுகிய காலத்தில் நாட்டை வழிநடத்த மச்சாடோவிற்குத் தேவையான ஆதரவு தற்போது இல்லை என்ற தனது "யதார்த்தமான" மதிப்பீட்டில் டிரம்ப் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த மாத தொடக்கத்தில் வெனிசுலாவின் நீண்டகாலத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிறகு, வெனிசுலாவில் ஜனநாயக செயல்முறைகள் தொடங்கும் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

இருப்பினும், மதுரோவின் ஆட்சிக்காலத்தைப் போலவே தற்போதும் அடக்குமுறைகள் தொடர்வதாக மச்சாடோ செனட்டர்களிடம் தெரிவித்ததாக ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி கூறினார். 

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், டிரம்ப்பின் ஆதரவால் நாளுக்கு நாள் தனது அதிகாரத்தை வலுப்படுத்தி வருவதாக அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05