செய்திகள்
அனர்த்த நிலைமையைக் குறைக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு

Jan 16, 2026 - 08:16 PM -

0

அனர்த்த நிலைமையைக் குறைக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு

திட்வா' புயல் தொடர்பான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, ஜூலை மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (16) அழைக்கப்பட்டது. 

இதன்போது நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி, இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உள்ளிட்ட பல பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்கள்​ை கிடைக்கப்பெறவில்லை எனக் குறிப்பிட்டார். 

அதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவக் குழு உள்ளிட்ட பிரதிவாதிகள் சிலருக்கு அறிவித்தல்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டது. 

இங்கு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், குறித்த காலப்பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து முன்னறிவிப்புகளை வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். 

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முற்பகல் மழையுடனான வானிலை தெளிவாக அதிகரித்திருந்த போதிலும், இது குறித்துக் கவனத்திற் கொள்ளாது அன்றைய தினம் இரவு 11.10 மணியளவில் திடீரென கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் பாரிய நீர் வெளியேற்றப்பட்டதாகவும், அதன் விளைவாக மறுநாள் அதிகாலை 3.00 மணியளவில் கம்பளை பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

அதன்பின்னர் கெலிஓய, பேராதனை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்கள் படிப்படியாக நீரில் மூழ்கியதாக அவர் சுட்டிக்காட்டினார். 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதிகாரிகள் அது தொடர்பில் கவனக்குறைவாகச் செயற்பட்டுள்ள விதம் இதன் மூலம் நன்கு தெளிவாகுவதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார். 

அதனையடுத்து இந்த மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக ஜூலை மாதம் 15 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், தேசிய அனர்த்த முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

தனது சட்டத்தரணி அலுவலகம் கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளதாகவும், கடந்த நாட்களில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள நிலைமை காரணமாக அந்த அலுவலகம் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் விளைவாகத் தனது கணினி அமைப்பிலிருந்த பல முக்கியமான தரவுகள் அழிவடைந்துள்ளதாகவும், இதன்காரணமாகத் தனது தொழிலுக்குக் கடும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனர்த்த நிலைமையொன்று ஏற்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதிவாதிகளின் கவனக்குறைவு அல்லது கடமையைச் செய்யத் தவறியமை காரணமாகவே இவ்வாறான அழிவு நிலை ஏற்பட்டதாகவும், அவர்கள் முன்னாயத்தத்துடன் செயற்பட்டிருந்தால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைத்துக்கொண்டிருக்க முடியும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். 

விசேடமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை விடுவிப்பதற்கு முன்னர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால், கம்பளை, கலஹா, பேராதனை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாரிய சேதங்களைக் குறைத்துக்கொண்டிருக்க முடியும் எனவும் மனுதாரர் தெரிவிக்கின்றார். 

அதற்கமைய, பிரதிவாதிகளின் கவனக்குறைவான செயற்பாடுகள் காரணமாகத் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05