Jan 16, 2026 - 08:53 PM -
0
நாவலப்பிட்டி, வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபரொருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேக நபரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற தினதன்று மதியம், மதுபோதையில் இருந்த சந்தேக நபர் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடமொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கேயே கைவிட்டுச் சென்றுள்ளார்.
சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பெற்றோரும் தோட்டத் தொழிலாளர்களும் அவரைத் தேடியுள்ளனர்.
சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர், தோட்ட லயன் குடியிருப்புகளுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டுள்ளனர்.
இதன்போது சிறுமி சந்தேக நபர் குறித்த விபரங்களை வெளியிட்டதையடுத்து, சிறுமியின் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி முதற்கட்டமாக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.டி. ஹேரத்தின் மேற்பார்வையில், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.எம். குலதுங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
--

