Jan 17, 2026 - 09:33 AM -
0
உலகம் போற்றும் முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாருக்கு, கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் சிலை திறக்கும் நிகழ்வு, ‘சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின்’ ஏற்பாட்டில் நேற்று (16) மாலை நடைபெற்றது.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரு கிராமம், ஒரு நாடு மற்றும் ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவு வரிகளான 'மனதில் உறுதி வேண்டும்', 'வாக்கினிலே இனிமை வேண்டும்', 'நினைவு நல்லது வேண்டும்' போன்ற கவிதை வரிகள் உறுதிமொழியாக வாசிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாரதியின் கவிதைகள் இந்த உலகிற்கு இன்று எவ்வளவு பொருத்தமானவை என்பதையும், அதிலுள்ள அர்த்தங்கள் அழியாச் சுவடுகளாக மக்கள் மனதில் பதிந்துள்ளதையும் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு கிராமத்தில் சிலை வைப்பதன் மூலம், பாரதி வலியுறுத்திய சமூக நியாயங்கள் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இச்சிலை திறக்கப்படுவதாகப் பலரும் வலியுறுத்தினர்.
இதன்போது, கல்விக்கு ஆற்றும் பணிக்காக சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் சுப்பையா பத்மநாதன் கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும், அக்கிராமத்தில் கல்வி ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, பாரதியின் சமூக விடுதலைப் பாடல்களும் ஒலிக்கப்பட்டன.
--

