Jan 18, 2026 - 01:23 PM -
0
நடப்பு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ் சினிமாவில் பல பெரிய படங்கள் வெளியாகின.
இதில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையியில்' (TTT) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
நிதீஷ் சகதேவ் இயக்கத்தில் ஜனவரி 15 ஆம் திகதி வெளியான TTT, வெறும் மூன்று நாட்களில் இந்திய அளவில் சுமார் 8.70 கோடி ரூபா (Net) வசூலை ஈட்டியுள்ளது.
முதல் நாள்: 1.40 கோடி ரூபா.
இரண்டாம் நாள்: 2.50 கோடி ரூபா (80% வளர்ச்சி).
மூன்றாம் நாள் (சனிக்கிழமை): 4.50 கோடி ரூபா.
படத்திற்கு நிலவும் அபரிமிதமான மக்களின் நேர்மறையான கருத்துக்கள் காரணமாக, திரையரங்குகளில் 70% முதல் 80% வரையான இருக்கைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் பல கோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சுமார் 150 கோடி ரூபா பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', ஆரம்பத்தில் நல்ல வசூலைப் பெற்றாலும் தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
வெளியான 7 நாட்களில் சுமார் 41 - 48 கோடி ரூபா வரை வசூலித்துள்ள போதிலும், படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு எனக் கருதப்படுகிறது.
'பராசக்தி' படுதோல்வி நிலையை நோக்கிச் செல்வதாகத் திரைத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கும் அதேவேளை, சிறிய பட்ஜெட்டில் உருவான TTT ஒரு 'கிளீன் ஹிட்' ஆக உருவெடுத்துள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் ஜீவா ஒரு எதார்த்தமான கிராமத்து அரசியல் நையாண்டி படத்தில் நடித்திருப்பது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான திரைக்கதை காரணமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்குச் செல்வதைக் காண முடிகிறது.
மொத்தத்தில், இந்த 2026 பொங்கல் வின்னராக 'தலைவர் தம்பி தலைமையியில்' படம் உருவெடுத்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

