Jan 21, 2026 - 08:33 AM -
0
பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய பெண் ஒருவருக்கு எதிராக, அந்த இளைஞரின் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கேரளா பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பேருந்து பயணத்தின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, அங்கிருந்த பெண் ஒருவர் அவரை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் மிக வேகமாகப் பரவியதுடன், அந்த இளைஞர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட அவமானத்தினாலும், மன உளைச்சலினாலும் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இளைஞரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில், குறித்த பெண் அந்த இளைஞர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் அந்த காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதம் ஆகியவை அந்த இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணுக்கு எதிராக பொலிஸார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

