Jan 21, 2026 - 09:49 AM -
0
கொழும்பு பங்குச் சந்தை (CSE) மற்றும் S&P Dow Jones Indices ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு இறுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, S&P Sri Lanka 20 சுட்டெண்ணில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பானது, 2025 டிசம்பர் 19 அன்று பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்த பின்னர், 2025 டிசம்பர் 22 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
S&P Sri Lanka 20 சுட்டெண்ணானது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், சந்தை மூலதனம், பணப்புழக்கம் (Liquidity), நிதி நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான இலாபத்தன்மை உள்ளிட்ட கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 20 மிகப்பெரிய மற்றும் அதிக வர்த்தக நடவடிக்கைகளை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் உறுப்பு நிறுவனங்கள், மிதக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவதுடன், ஒரு தனிப்பட்ட பங்கின் ஆதிக்கம் சமச்சீரற்றதாக இருப்பதைத் தவிர்க்க, ஒவ்வொரு பங்கிற்கும் குறிப்பிட்ட உச்ச வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த மைல்கல் குறித்து கருத்துத் தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், S&P Sri Lanka 20 சுட்டெண்ணில் நாம் உள்வாங்கப்பட்டமையானது, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்த எமது கடந்த கால மற்றும் தற்போதைய ஊழியர்களின் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான கூட்டு முயற்சி மற்றும் விடாமுயற்சியின் பயனாகும். இந்த அங்கீகாரமானது, எமது அடித்தளத்தின் பலத்தையும், எமது வளர்ச்சியடைந்த ஒழுங்குமுறையையும், பல்வேறு வணிகச் சுழற்சிகளிலும் நாம் வெளிப்படுத்திய சீரான செயல்திறனையும் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறக்கூடிய வணிகங்களைக் கட்டியெழுப்புவதிலும், வலுவான ஆளுமைத் தரங்களைப் பேணுவதிலும், எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான நீண்டகாலப் பெறுமதியை வழங்குவதிலும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என தெரிவித்தார்.
S&P Sri Lanka 20 சுட்டெண்ணானது, உலகளாவிய சுட்டெண் முறையியல் (Global Index Methodologies) மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைத்து நிறுவனங்களும் Global Industry Classification Standard (GICS®) எனும் உலகளாவிய தொழில் வகைப்பாட்டுத் தரத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சுட்டெண்ணில் இணைவதற்குத் தேவையான தகுதிகள் பின்வருமாறு: குறைந்தபட்சம் 500 மில்லியன் ரூபாய் மிதக்கும் சந்தை மூலதனம் இருத்தல் வேண்டும். கடந்த ஆறு மாத காலப்பகுதியில், தினசரி வர்த்தகத்தின் இடைநிலை மதிப்பு 250,000 ரூபாவாக இருத்தல் வேண்டும். சுட்டெண் மறுசீரமைப்பு குறிப்புத் திகதிக்கு முன்னைய 12 மாதங்களில், நிகர வருமானம் நேர்மறையானதாக (இலாபகரமாக) இருத்தல் வேண்டும்.
S&P Sri Lanka 20 சுட்டெண்ணில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் இணைக்கப்பட்டமையானது, ஒரு குடும்ப நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று அதிகப்படியான பொதுப் பங்குகளைக் கொண்ட ஒரு முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ள அக்குழுமத்தின் நீண்டகால மூலதனச் சந்தைப் பயணத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த காலங்களில், நிறுவன ரீதியான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும், ஆளுமைத் தரங்களை வலுப்படுத்துவதிலும் மற்றும் தனது பங்குதாரர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதிலும் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, தற்போது இந்நிறுவனம் சுமார் 70 பில்லியன் இலங்கை ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது கொழும்பு பங்குச் சந்தையில் அதன் அளவையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதற்கு இணையாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனது பங்குகளின் திரவத்தன்மையை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும் அண்மைக்காலமாகப் பங்குப் பிரிப்பு உள்ளிட்ட முறையான கூட்டாண்மை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சிகள் சந்தையில் குறித்த பங்கின் தொடர்ச்சியான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பங்களிப்பு செய்துள்ளன. இதற்கமைய, கடந்த ஆறு மாத காலத்தில் அதன் தினசரி வர்த்தகத்தின் இடைநிலை மதிப்பு 45.6 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது. இது S&P Sri Lanka 20 சுட்டெண்ணில் இணைவதற்குத் தேவையான திரவத்தன்மை வரம்புகளை மிக இலகுவாகப் பூர்த்தி செய்கிறது.
58 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகால வரலாற்றைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சுகாதாரப் பாதுகாப்பு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாய வணிகம் ஆகிய துறைகளில் தனது பங்களிப்பின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்குழுமம் Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee, Milady, Healthguard Pharmacy மற்றும் Lina Manufacturing உள்ளிட்ட முன்னணி உள்ளூர் வர்த்தக நாமங்களின் தாயகமாக விளங்குகின்றது. சுமார் 2,000 பணியாளர்களைக் கொண்டுள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2025 நிதியாண்டில் (FY25) 59.3 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியானது வர்த்தகத்தின் அளவு, செயல்திறன் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமையப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

