Jan 21, 2026 - 10:01 AM -
0
2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் நோக்கில், TikTok நிறுவனத்துடன் FIFA வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், FIFA உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல்முறையாக அதன் முன்னுரிமை பெற்ற தளம் (Preferred Platform) என்ற அந்தஸ்தை TikTok பெறுகிறது. இதன் விளைவாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான விரிவான அதிகாரப்பூர்வத் தகவல்கள், மைதானத்திற்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான பிரத்யேகக் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் வகையிலான நவீன அனுபவங்கள் ஆகியவற்றை TikTok தளம் வழங்கவுள்ளது.
2026-ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கவுள்ள இந்த ஒப்பந்தமானது, கால்பந்தின் மாபெரும் திருவிழாவை ரசிகர்கள் டிஜிட்டல் தளங்களில் அனுபவிக்கும் முறையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தவுள்ளது. நேரடி போட்டி ஒளிபரப்புகளையும் கடந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களை (Creators) கால்பந்து உலகக் கிண்ணத்துடன் ஒன்றிணைக்கும் பாலமாக TikTok செயல்பட உள்ளது.
இந்தக் கூட்டணியின் மூலமாக, 2026 FIFA உலகக் கிண்ணம் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பிரத்யேக உள்ளடக்கங்களை (Original Content) TikTok வழங்கவுள்ளது. கால்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் காலப்பகுதியில், ரசிகர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களின் முதன்மையான தளமாக TikTok விளங்கும். அத்துடன், ரசிகர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி மகிழும் வகையிலும், போட்டிகளில் நேரடியாகப் பங்கெடுக்கும் விதத்திலுமான நவீன கால்பந்து அனுபவங்களும் சமூகம் சார்ந்த கால்பந்து உள்ளடக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA மகளிர் உலகக் கிண்ணத்தின் போது, TikTok மற்றும் FIFA இடையே மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டணியின் தொடர்ச்சியாகவே இப்புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தொடரின் போது உலகளவில் பல்லாயிரக்கணக்கான கோடி பார்வைகளைப் பெற்று TikTok சாதனை படைத்தது. விளையாட்டு உலகில் டிஜிட்டல் தளங்களின் முக்கியத்துவம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அந்த வெற்றி நிரூபித்தது.
இந்த விருப்பமான தளம் ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக, TikTok தளத்தில் FIFA உலகக் கிண்ணம் 2026 பிரத்யேக மையம் (Hub) செயல்படும். TikTok GamePlan தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த மையமானது, 48 அணிகள் களம் காணும் இந்த பிரம்மாண்டத் தொடரை ரசிகர்களின் கண்முன் தத்ரூபமாகக் கொண்டு வரும் ஒரு பரபரப்பான தகவல் பாலமாகத் திகழும். இங்கு ரசிகர்கள் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மற்றும் நேரலை ஒளிபரப்பு குறித்த விபரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி, பிரத்யேக ஸ்டிக்கர்கள், ஃபில்டர்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த சுவாரஸ்யமான அம்சங்கள் (Gamification) வழியாக ரசிகர்கள் போட்டிகளில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்றுப் பல்வேறு ஊக்கப் பரிசுகளையும் வெல்ல முடியும்.
இது குறித்து FIFA பொதுச்செயலாளர் Mattias Grafström கூறுகையில், “2026 FIFA உலகக் கிண்ணத்தின் உற்சாகத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே FIFA-வின் முக்கிய நோக்கமாகும். அந்த இலக்கை எட்ட, இத்தொடரின் முதல் முன்னுரிமை பெற்ற தளமாக TikTok இணைந்திருப்பதை விடச் சிறந்த வழி எதுவுமில்லை. இந்தக் கூட்டணியானது, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகக் கிண்ணத்துடன் மிக நெருக்கமாக இணைக்கும்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது குறித்து TiTok நிறுவனத்தின் உலகளாவிய உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் James Stafford பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் TikTok தளத்தில் கால்பந்து தொடர்பான உள்ளடக்கங்கள் உலகளவில் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளன. FIFA-வின் வரலாற்றிலேயே முதல் முன்னுரிமை பெற்ற தளமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது. 2026 உலகக் கிண்ணத்தை
ரசிகர்கள் மைதானத்தில் நடக்கும் 90 நிமிடப் போட்டிகளுக்கும் அப்பாலும் அனுபவிக்க வாய்ப்பளிக்கவுள்ளோம் இதற்காகப் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் படைப்பாளர்கள் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், எங்களது TikTok GamePlan தொழில்நுட்பமானது, விளையாட்டுத் துறையில் உள்ள எங்களது கூட்டாளர்களுக்கு ரசிகர்களின் ஈடுபாட்டை மிகச்சிறந்த வணிக ரீதியிலான வெற்றியாக மாற்றிக் கொடுக்கும்,” என்றார்.
வரலாற்றில் முதல்முறையாக, TikTok மற்றும் FIFA இணைந்து உலகளாவிய படைப்பாளர் திட்டம் (Global Creator Programme) ஒன்றையும் அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பாளர்களுக்கு, செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் போன்ற மைதானத்திற்குப் பின்னால் நடக்கும் பிரத்யேகத் தருணங்களை நேரடியாகப் படம் பிடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும், உலகக் கிண்ணத்தின் பழைய வரலாற்று ஆவணக் காட்சிகளைப் (Archival Footage) பயன்படுத்தி புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் வசதி மற்ற படைப்பாளர்களுக்கும் அளிக்கப்படும். இதன் மூலம், உலகக் கிண்ண அனுபவத்தை வழக்கமான பாணியில் அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.

