Jan 21, 2026 - 10:12 AM -
0
ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் பிரபல்யமான சமகால நாடக தயாரிப்புக்கள் ஒன்றில் இலங்கை நடிகர் ஒருவர் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பது இத் திரையிடலை ஒரு முக்கிய மைல்கல் தருணமாக்குகின்றது Colombo, Sri Lanka: சிலோன் தியேட்டர்ஸ் (Pvt) லிமிடெட், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, ஹிரான் அபேசேகர நடித்த நேஷனல் தியேட்டர் (NT) லைவ்வின் ஹேம்லெட்டின் ஆசியாவின் முதல் திரையிடலை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இம் முதல் திரையிடல் ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு தெமட்டகொடையில் (கொழும்பு 9) உள்ள ரீகல் சினிமாவில் இடம்பெறும். இலங்கை நடிகரான ஹிரான் அபேசேகர பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் நேஷனல் தியேட்டர் தயாரிப்பில் ஹேம்லெட்டாக நடித்த முதல் ஆசிய நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பார்வையாளர்களை பொறுத்தவரை இத் திரையிடல் ஒரு கொண்டாட்டமாகவும், மீள்வருகையாகவும் அமைகிறது. இது படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், உலகத் தரம் வாய்ந்த கலாச்சாரத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், நாடகம் மற்றும் படைப்புக் கலைகள் ஊடாக இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே ஆழமான, மக்களிடையேயான தொடர்புகளை உருவாக்குவதற்கும் பிரிட்டிஷ் கவுன்சிலின் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தொடக்கத் திரையிடலைக் கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சில், அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான ஷேக்ஸ்பியர் நாடகப் போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களையும் நாடக ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நடிகர்களையும் அறிமுகக் காட்சியில் கலந்து கொள்ள அழைக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த நாடக அரங்கையும் உலக அரங்கில் ஒரு இலங்கை கலைஞரின் அசாதாரண பயணத்தையும் கொண்டாடும் இந்த மைல்கல்லான NT லைவ் தயாரிப்பை இலங்கை பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என சிலோன் தியேட்டர்ஸின் (நிறுவனம் )பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் (உள்நாட்டு )நாட்டுக்கான பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் படைப்புத் திறமைகளை ஆதரிப்பதிலும், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் நீடித்த கலாச்சார தொடர்புகளை உருவாக்குவதிலும் பிரிட்டிஷ் கவுன்சிலின் அர்ப்பணிப்பை இத் திரையிடல் பிரதிபலிக்கிறது. NT லைவ் போன்ற புதுமையான வழிமுறைகளுடன் கலைச் சிறப்பை இணைப்பதன் மூலம் கலாச்சாரத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதையும் படைப்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். என்றார்.
தயாரிப்பு மற்றும் கலைஞர் தொடர்பாக
ஹேம்லெட்டின் இந்த நேஷனல் தியேட்டர் தயாரிப்பு, ஹிரான் அபேசேகரவின் அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறது. ஷேக்ஸ்பியரின் மன சஞ்சலம் கொண்ட இளவரசன் பாத்திரத்தில் அவர் காட்டிய நடிப்பு, உணர்ச்சிகளின் நேர்மை, நவீனத் துடிப்பு மற்றும் தனித்துவமான வெளிப்பாடு காரணமாக பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஹிரான் அபேசேகரவின் கதை இலங்கை பார்வையாளர்களை ஆழமாக ஈர்க்கின்றது. இலங்கையில் ஆரம்பகாலப் பயிற்சிக்குப் பின்னர் அவர் புலமைப்பரிசில் ஊடாக Royal Academy of Dramatic Art (RADA)இல் தொடர்ந்து படிக்கச் சென்றார். இவ் வாய்ப்பு அவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து அவரது வாழ்க்கை அவரை நேஷனல் தியேட்டர் மற்றும் West End உள்ளிட்ட உலகின் மிகவும் மதிப்புமிக்க மேடைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. திறமைக்கு ஏற்ற வாய்ப்பு, வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கிடைக்கப் பெற்றால் எவை எல்லாம் சாத்தியம் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக அவரது பயணம் திகழ்கிறது.
திறமை, கலாச்சாரம் மற்றும் வாய்ப்புகளை இணைப்பதில் பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சிலோன் தியேட்டர்களின் பங்கு
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் (ஆகிய நிறுவனங்கள்) ஆகியன NT லைவ்வை இலங்கைக்கு கொண்டுவருவதிலும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு புதிய கலாச்சார எல்லைகளை திறப்பதிலும் முக்கிய பங்கை வகித்துள்ளன. இலங்கையின் முதன்முதல் NT லைவ்வில் ஹிரான் அபேசேகர நடித்த Life of Pi காட்சிப்படுத்தப்பட்டது. இது இலங்கை பார்வையாளர்களுக்கு கொழும்பில் உள்ள உள்ளூர் திரையரங்கில் NT லைவ் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு வரலாற்று தருணமாக இருந்தது.
2026ஆம் ஆண்டின் முதல் NT லைவ்வில் ஹிரான் அபேசேகர மீண்டும் இலங்கைத் திரைகளில் தோன்றுவார். இது அவரது கலைப் பயணத்திற்கும் இலங்கையில் NT லைவ்வின் வளர்ச்சிக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை வலுப்படுத்துகிறது. பிரிட்டிஷ் கவுன்சில், NT லைவ் போன்ற புதுமையான தளங்கள் ஊடாக உலகளாவிய நாடக அரங்கை உள்ளூர் பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதை தொடர்கிறது.
திரையிடல் திகதிகள், இடங்கள் மற்றும் அனுமதிச் சீட்டுக்கள் பற்றிய மேலதிக விபரங்களை சிலோன் தியேட்டர்ஸின் இணையத்தளம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் இன்ஸ்டாகிராம் பக்கமான https://www.instagram.com/britishcouncilsrilanka/ இல் பார்வையிடலாம் அல்லது 0766192370 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்களுக்கான குறிப்பு - ஹிரான் அபேசேகர
* புலமைப்பரிசில் ஊடாக Royal Academy of Dramatic Art (RADA)இல் பயிற்சி பெற்றவர்.
* நேஷனல் தியேட்டர் மற்றும் West End முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.
* நேஷனல் தியேட்டரின் கலைஞர் சுயவிவரம் மூலம் முழு தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கையின் படைப்புப் பொருளாதாரம்
* பிரிட்டிஷ் கவுன்சில் ஆராய்ச்சி, படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு நான்கு ஆண்டுகளில் USD433.62 மில்லியனிலிருந்து USD845.41 மில்லியனாக வளர்ந்துள்ளதை காட்டுகிறது - இது 95% அதிகரிப்பு ஆகும். இது துறையின் வேகமான விரிவாக்கம் மற்றும் பொருளாதார திறனை எடுத்துக்காட்டுகிறது.
இங்கிலாந்தின் படைப்புப் பொருளாதாரம்: 2024இல் நாடகத்தின் முக்கியத்துவம்
* இலண்டனின் West End, 17.1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. இது பிரீமியர் லீக் கால்பந்தாட்ட பார்வையாளர்களை விட 2.5 மில்லியனால் அதிகம் ஆகும்.
* வருடாந்த நாடக வருமானம் £4.4 பில்லியனை எட்டியுள்ளதுடன் ஐக்கிய இராச்சிய பொருளாதாரத்திற்கு £2.39 பில்லியன் GVA பங்களித்தது.
* இத் துறை நாடு முழுவதும் 205,000 தொழில்களை ஆதரிக்கிறது.
* இலண்டனுக்கு வருகை தரும் சர்வதேச பார்வையாளர்களில் நான்கில் ஒருவர் West End நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை கலாச்சார சுற்றுலாவில் நாடகத்தின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சிலோன் தியேட்டர்ஸ் பற்றி
1928ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட், இலங்கையின் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இது சினிமா தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட அனுபவங்களில் தொடர்ந்து முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. இதில் 1956இல் சிலோன் ஸ்டுடியோஸ் லிமிடெட் ஊடாக இலங்கையின் முதல் திரைப்பட செயலாக்க வசதியும் உள்ளடங்கும். இன்று, சிலோன் தியேட்டர்ஸ் ஏழு இடங்களில் 18 திரைகளைக் கொண்டுள்ளதுடன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்துகிறது. சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன், இலங்கையின் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், உள்ளூர் பார்வையாளர்களை மகிழ்விக்கும் நிறுவனமாக இது உள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது ஐக்கிய இராச்சியத்தின் கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி மூலம் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய நாடுகளின் மக்களிடையே இணைப்பை ஏற்படுத்தி, புரிதல் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் ஊடாக அமைதியான வளமான எதிர்காலத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ளோம். 2024-25இல் நாங்கள் 600 மில்லியன் மக்களை அடைந்துள்ளோம்.

