Jan 21, 2026 - 03:00 PM -
0
தமிழ் சினிமாவின் 2026ம் ஆண்டின் ஆரம்பம் சர்ச்சைகளுடன் தான் ஆரம்பமாகியுள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த படங்களின் 'சக்சஸ்' என்பது வசூல் ரீதியாக இலாபமா என்பது தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
பொங்கலுக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சென்னை, உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே அந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரிய வரும். அந்தப் படம் இந்த மாத இறுதியில் வந்தாலும், அடுத்த மாத துவக்கத்தில் வந்தாலும் அதற்குப் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களுக்காக ஒரு நீண்ட காத்திருப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வரலாம் என்று ஒரு தகவல். கமல்ஹாசனின் 237வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
ஆனால், சட்டசபைத் தேர்தல் திகதி அறிவித்த பின் பிரச்சாரத்திற்குக் கமல் போய்விட்டால் படப்பிடிப்புக்கு இடைவெளி விடுவார்கள். அவரது 'இந்தியன் 3' நிலை என்ன என்பது தெரியவில்லை.
அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவர் கார் ரேஸில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விக்ரமின் அடுத்த பட அறிவிப்பும் இழுத்துக் கொண்டே போகிறது.
சூர்யா நடித்து முடித்துள்ள 'கருப்பு' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்த பிறகுதான் வெளியீட்டை அறிவிப்பார்கள். பெப்ரவரியில் வந்தால் உண்டு. இல்லை என்றால் தமிழ்ப் புத்தாண்டுதான். மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். தனுஷின் 'கர' படம் கோடை விடுமுறையில் வர உள்ளது.
விஜய் சேதுபதியின் 'காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் வருகிறது. இது மவுனப் படம் என்ற வித்தியாச முயற்சி என்பதால் அது கமர்ஷியல் படங்களில் சேருவது சந்தேகம்தான். அவர் நடித்துள்ள 'டிரைன், ஸ்லம் டாக்' வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விஷால் இயக்கி நடித்து முடித்துள்ள 'மகுடம்' படம் கோடை விடுமுறை என அறிவித்துவிட்டார்கள். கார்த்தியின் அடுத்த வெளியீடாக 'சர்தார் 2' படம் வர வேண்டும். அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி ஒரே சமயத்தில் மோதிக் கொள்ள மாட்டார்கள்.
சிலம்பரசன், ரவிமோகன், ஆர்யா ஆகியோரின் அடுத்த படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அடுத்தடுத்த வாரங்களில் 'ஜனநாயகன், கருப்பு, சர்தார் 2' ஆகியவைதான் வரும் சூழல் உள்ளது. 'ஜனநாயகன்' வெளியீட்டைப் பொறுத்தே 'கருப்பு, சர்தார் 2' வெளியீட்டுத் திகதிகள் முடிவாகலாம்.
இல்லையென்றால் தமிழ்ப் புத்தாண்டு, கோடை விடுமுறை வரை முன்னணி நடிகர்களின் படங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட மாதங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் நிலைதான் இருக்கும்.

