Jan 21, 2026 - 10:09 PM -
0
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தவுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் இன்று (21) இதனைத் தெரிவித்தார்.
கிரீன்லாந்தின் உரிமையைக் கையகப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால், சில ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் பழிவாங்கும் நோக்கில் சுங்க வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய சில நாட்களிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த ஜூலை இறுதியில் ஸ்கொட்லாந்தின் டர்ன்பெரி (Turnberry) நகரில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பது மற்றும் 2020 இல் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு அமெரிக்க கடல் நண்டுகளுக்கான வரிவிலக்கைத் தொடர்வது குறித்த சட்ட முன்மொழிவுகளை ஐரோப்பிய ஒன்றியம் விவாதித்து வந்தது.
இந்த முன்மொழிவுகளுக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களின் அங்கீகாரம் அவசியமாகும்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்று பல சட்டமியற்றுபவர்கள் ஏற்கனவே முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டியிருக்கும் நிலையில், அமெரிக்கா 15% வரி விகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், சில நிபந்தனைகளுடன் இதனை ஏற்க அவர்கள் முன்னர் சம்மதித்திருந்தனர்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வர்த்தகக் குழு இது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனவரி 26-27 திகதிகளில் வாக்கெடுப்பு மூலம் அறிவிக்கவிருந்தது. தற்போது அந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகக் குழுவின் தலைவர் பேர்ண்ட் லாங்கே (Bernd Lange) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ட்ரம்ப்பின் புதிய சுங்கவரி அச்சுறுத்தல்கள் டர்ன்பெரி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

