செய்திகள்
மத்திய மலைநாட்டைப் பாதுக்க புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை

Jan 21, 2026 - 10:31 PM -

0

மத்திய மலைநாட்டைப் பாதுக்க புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை

நிர்மாணம் மற்றும் நிலப்பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா புயலினால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

டித்வா புயல் காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4,000 மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக இடம்பெற்ற முறையற்ற நிர்மாணம், பயிர்ச்செய்கை மற்றும் பராமரிப்பு இல்லாததால் இது ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரைவான தேசியக் கொள்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. 

தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

இந்த நடவடிக்கைகளுக்கு நிதியமொன்றை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டு பணிப்பாளர் அலுவலகப் பிரதானி Cholpon Mambetova, அதன் விவசாயம் மற்றும் இயற்கை வள சிரேஷ்ட நிபுணர் Sumith Pokhrel, உதவி திட்ட அதிகாரி கிருஷாந்தி தாபரே ஆகியோருடன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Azusa Kubota, அந்த திட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வகீஷா குணசேகர, சுகந்தி சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05