Jan 22, 2026 - 12:51 PM -
0
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நகைக் கடைக்கு வருகை தந்த நபர், பல தங்க சங்கிலிகளை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டு லட்சத்து எண்பத்தொன்பதாயிரம் ரூபா பெறுமதியான நகையொன்றைத் தெரிவு செய்துள்ளார்.
அதற்கான பற்றுச்சீட்டினைப் எழுதிக்கொண்டிருந்த வேளையில், அந்நபர் தங்க நகையை எடுத்துக்கொண்டு ஓடிய காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், சம்பவத்தின் போது கடை உரிமையாளர் வெளியில் சென்றிருந்ததாகவும், கடையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் மாத்திரமே இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து சிசிடிவி காணொளி ஊடாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
--

