Jan 22, 2026 - 01:30 PM -
0
1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அட்டாலே எஸ்டேட், இன்று இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புவியியல் ரீதியான நன்மைகள் கொண்ட ரப்பர் தோட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது முதலில் மெஸ்ர்ஸ் கிராண்ட் சென்ட்ரல் (சிலோன்) ரப்பர் எஸ்டேட்ஸ் லிமிடெட்டின் பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது, இந்த நிறுவனம் Carson Cumberbatch & Company மூலம் 43,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை நிர்வகித்து வந்தது.
காலப்போக்கில் இந்த எஸ்டேட் வளர்ச்சியடைந்து, மாபோட, போயகொட, டிக்ஹேன, பழைய மற்றும் புதிய அரந்தர போன்ற அண்டை நிலங்களையும், பின்னர் டார்பெட் மற்றும் மைலேண்ட் எஸ்டேட்களையும் படிப்படியாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பிரித்தானிய காலனித்துவ காலத்தில், இவற்றுள் பல சுயாதீனமான தோட்டங்களாக இயங்கி வந்தன. குறிப்பாக பிந்தெனிய ஓய தோட்டம் தனக்கென ஒரு ரப்பர் தொழிற்சாலையைத் இயக்கி வந்ததுடன், தேயிலைப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டிருந்தது.
இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் ஆரம்பகால வணிக விரிவாக்கம் முதல், சுதந்திரத்திற்குப் பிந்தைய தேசியமயமாக்கல் மற்றும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு மாற்றங்கள் வரையிலான பரந்த மாற்றங்களை இந்தத் தோட்டத்தின் நீண்டகாலப் பயணம் பிரதிபலிக்கிறது. 1976 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து, அட்டாலே எஸ்டேட் ஜனதா எஸ்டேட்ஸ் அபிவிருத்திச் சபையின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. பின்னர் 1992 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனியார்மயமாக்கலைத் தொடர்ந்து, இந்தத் தோட்டம் Kegalle Plantations PLC வசம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக ரீதியிலான ஒருங்கிணைப்புகள், இந்த எஸ்டேட்டை அதன் தற்போதைய 1,142 ஹெக்டேயர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தியுள்ளன. இதன் மூலம் இது நாட்டின் மிகப்பெரிய ரப்பர் தோட்டமாகத் திகழ்கிறது. இன்று, இது கேகாலை மாவட்டத்தில் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் பரந்து விரிந்துள்ளதோடு, அனுபவம் வாய்ந்த தோட்ட அதிகாரிகளின் நிர்வகிப்பால் தொடர்ந்து நன்மையடைந்து வருகின்றது. இவர்களின் நிபுணத்துவமே இந்தத் எஸ்டேட்டின் நீண்டகால வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தபோதிலும், அவர்களின் தலைமைத்துவமானது இந்தத் எஸ்டேட்டும் அதன் தொழிற்சாலையும் இன்றுவரை உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் செயல்பாட்டுச் சிறப்பு ஆகியவற்றில் உயர்தரத்தைப் பேணுவதை உறுதி செய்துள்ளது.
நிலையான பெருந்தோட்ட முகாமைத்துவம், ஆராய்ச்சி அடிப்படையிலான நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அர்ப்பணிப்பு
இலங்கையின் தாழ்நில ஈர வலயத்தில் அமைந்துள்ள சாதகமான நிலப்பரப்பும், நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட பெருந்தோட்ட நிர்வகிப்புக்கான அதன் அர்ப்பணிப்புமே அட்டாலே எஸ்டேட்டின் பலமாகும். இந்தத் தோட்டம் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 மில்லிமீட்டர் வரையிலான அபரிமிதமான மழையையும், அதனுடன் சுமார் 27.8°C சராசரி வெப்பநிலையையும் சாதகமாகக் கொண்டுள்ளது. அதிக ஈரப்பதம் மட்டங்கள் மண்ணின் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும் நீராவியாதலை குறைப்பதற்கும் உதவுகின்றன, இதனால் ரப்பர் செய்கைக்கு உகந்த நிலைமைகள் உறுதி செய்யப்படுகின்றன. மெதுவான அலைபோன்ற மற்றும் மிதமான சரிவுகளைக் கொண்ட பல்வேறு புவியியல் அம்சங்கள், பயனுள்ள வடிகால் மற்றும் தோட்ட அணுகலை ஆதரிக்கின்றன, அதேநேரம் வளமான சிவப்பு-மஞ்சள் Podzolic மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு Latosolic மண் வலுவான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த மண்ணின் இயற்கையான அமிலத் தன்மை, இப்பகுதியின் காலநிலை மாதிரிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ரப்பரின் வேளாண் தேவைகளுடன் சிறந்த வகையில் பொருந்துகிறது.
நீண்டகால மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, இந்த எஸ்டேட் மூடுபயிர்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் ஆகியவற்றின் ஊடாக மண் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துகிறது. எஸ்டேட்டின் மூலோபாயத் திட்டத்தில் பயிர் பன்முகத்தன்மையும் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ரப்பருடன் இணைந்து Oil palm, தென்னை மற்றும் Agarwood ஆகியனவும் பயிரிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஏனைய தேசிய விவசாய அதிகார சபைகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, பரிந்துரைக்கப்பட்ட ரப்பர் குளோன் (Clones) ரகங்களைக் கொண்டு 100 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் மீள்நடவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான நிறுவனங்களுடன் இத்தோட்டம் கொண்டுள்ள இணக்கப்பாடானது, நவீன தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி சார்ந்த முறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி செயல்முறைகளை பின்பற்றுவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
அட்டாலே எஸ்டேட்டின் நிலைத்தன்மைக்கான நற்சான்றுகள், அதற்கு கிடைத்துள்ள Forest Stewardship Council – (FSC) சான்றிதழின் மூலம் மேலும் வலுப்பெறுகின்றன. 2019 ஆம் ஆண்டில் முதன்முதலில் பெறப்பட்ட இந்தச் சான்றிதழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாடு ஆகியவற்றுக்கான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
அட்டாலே எஸ்டேட், மிகவும் துல்லியமாக ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வகப்புத் திட்டங்கள், உயிரியல் பன்முகத்தன்மை மதிப்பீடுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குகிறது. அத்துடன் தொழிலாளர் நிலைமைகள், ஊழல் தடுப்பு, பாலின சமத்துவம், தகவல் அறிந்த ஒப்புதல் மற்றும் சமூக உரிமைகள் போன்ற துறைகளில் புதுப்பிக்கப்பட்ட கொள்கை வரிசைகளையும் இது பின்பற்றி வருகிறது.
எஸ்டேட்டிற்குள் காணப்படும் பாதுகாப்பு வலயங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகள் உள்நாட்டு மர இனங்களைக் கொண்டு செழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் தொடர்ச்சியான வரைபடப் புதுப்பித்தல்கள், நோய் கண்காணிப்பு மற்றும் நிரந்தர மாதிரி நிலங்களிலிருந்து (Permanent sample plots) பெறப்படும் நீண்டகால வளர்ச்சித் தரவுகள் ஆகியவை துணையாக அமைகின்றன. இந்த முயற்சிகள், எஸ்டேட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் அதேவேளையில், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் அட்டாலே எஸ்டேட் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றன.
உற்பத்திச் செயல்பாட்டில் சிறப்பு, சமூக மேம்பாடு மற்றும் முன்னோக்கிச் செல்லும் தோட்டப் பாரம்பரியம்
அட்டாலே ரப்பர் பதப்படுத்தும் மையம், சோல் கிரேப் மற்றும் பேல் கிரேப் ரப்பர் உற்பத்தியில் இலங்கையின் முதன்மையான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தினசரி இயற்கை ரப்பர் உற்பத்தி 5,000 கிலோகிராமிற்கும் அதிகமாக உள்ள நிலையில், இந்தத் தொழிற்சாலை அதன் ஆரம்பகால கிரேப் ரப்பர் உற்பத்தி வசதி என்ற நிலையிலிருந்து கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு தனியார்மயமாக்கலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், மேம்படுத்தப்பட்ட படிவுத் தொட்டிகள் (Settling tanks), விரிவாக்கப்பட்ட திரட்டுதல் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான கழிவு வெளியேற்றத்தை உறுதி செய்யும் பிரத்யேக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மூலம் அதன் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.
தரம் மற்றும் நிலைத்தன்மை மீதான இந்த ஈடுபாடு, அத்தொழிற்சாலைக்கு ISO 9001:2015 இணக்கப்பாடு மற்றும் FSC (FM மற்றும் COC) சான்றிதழ் உள்ளிட்ட பல மதிப்புமிக்க அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், தேசிய பசுமை விருது வழங்கும் நிகழ்வில் தங்க விருதினைப் பெற்ற இலங்கையின் முதலாவது இயற்கை ரப்பர் பதப்படுத்தும் நிலையம் என்ற மைல்கல்லை அட்டாலே எஸ்டேட் எட்டியது. இது நாட்டின் ரப்பர் துறையில் ஒரு முக்கிய அடையாளமாகும். கொழும்பு ரப்பர் வர்த்தகர் சங்கத்தினால் நடத்தப்படும் ஏல மேடைகளில், அட்டாலேயின் தயாரிப்புகள் தொடர்ந்து உயர் விலையைப் பெற்று வருகின்றன. இது அவற்றின் தூய்மை, சீரான தன்மை மற்றும் தரம் ஆகியவற்றிற்கான நற்பெயரை உறுதிப்படுத்துகிறது.
தொழிலாளர் நலன் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவை இந்தத் தோட்டத்தின் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். எஸ்டேட் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கமானது (Estate Workers’ Cooperative Society), கடன் திட்டங்கள், சேமிப்பு வசதிகள், நிலையான வைப்புக்கள் மற்றும் நலன்புரி நன்மைகள் ஆகியவற்றின் ஊடாகத் தொழிலாளர்களுக்கு நிதியுதவிகளை வழங்குகிறது.
ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாக்கள், பாடசாலை உபகரணங்கள் வழங்கல், வெசாக் தானம் மற்றும் மரணங்களின் போது வழங்கப்படும் நிதியுதவி போன்ற சமூகத்தை ஒன்றிணைக்கும் செயல்பாடுகள், தோட்டத்தின் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளையுடனான (PHDT) நீண்டகாலக் கூட்டாண்மையின் ஊடாக, அட்டாலே எஸ்டேட் மருத்துவ முகாம்கள், வீட்டு வசதி மேம்பாடுகள், சுகாதார வசதி மேம்படுத்தல்கள், பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சையகங்கள் மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இத்தகைய திட்டங்கள், வெளிப்படையான நிர்வாகத்தையும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் உறுதி செய்கின்றன.
இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஏனைய தேசிய அமைப்புகளுடனான வலுவான நிறுவனக் கூட்டாண்மைகள், அட்டாலே எஸ்டேட்டின் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. இத்தகைய கூட்டாண்மைகள் இணைந்து, நிலையான பெருந்தோட்ட நிர்வகிப்பு மற்றும் பொறுப்பான கைத்தொழில் உற்பத்தியில் இத்தோட்டம் வகிக்கும் தலைமைத்துவ நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அதன் செயல்பாடுகளின் ஊடாக, அட்டாலே எஸ்டேட் புத்தாக்கம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. இன்று, இது சுற்றுச்சூழலின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளர் நலனுக்காக முன்னின்று உழைப்பதற்கும், நாட்டின் ரப்பர் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

