Jan 22, 2026 - 02:46 PM -
0
தரம் மற்றும் சொகுசு ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி தொடர்மனைத் தொகுதிகள் வடிவமைப்பாளரான Fairway Holdings, தனது 7ஆவது தொடர்மனைத் திட்டமான Fairway Latitude ஐ அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 2026 ஜனவரி 20 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. Fairway Latitude இல. 7, ஹைலெவல் வீதி, கிருலப்பனை எனும் முகவரியில் அமைந்துள்ளது. Fairway Holdings தன்வசம் கொண்டுள்ள பரந்த இல்லத் தொகுதியில் புதிய அத்தியாயமாக Fairway Latitude அமைந்துள்ளது. கொழும்பு 05 இல் அமைந்துள்ள Fairway Latitude, ஹைலெவல் வீதி மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவற்றுக்கு நேரடி அணுகலை வழங்கும் வகையில் மூலோபாய ரீதியாக அமையப்பெற்றுள்ளது. முன்னணி பாடசாலைகள், முக்கிய வணிக மையங்கள், சிறந்த வைத்தியசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பின் பிரதான வீதிகளுடனான இணைப்பின் ஊடாக நவீன வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
Fairway Latitude இன் வசதிகளில் ஒன்றாக, நகரின் பரந்த காட்சியை இரசிக்கக்கூடிய வகையில் Rooftop Infinity Pool அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நவீன உடற்பயிற்சி கூடம், அழகுபடுத்தப்பட்ட கூரைத்தள முற்றம் (landscaped rooftop terrace) மற்றும் 250 பேர் வரை அமரக்கூடிய மண்டபம் (rooftop function hall) போன்ற வசதிகளையும் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அன்றாடத் தேவைகளுக்கான விற்பனை நிலையம், உதவியாளர் சேவைகள் (Concierge services) மற்றும் குடியிருப்பாளர்களுக்கென பிரத்தியேகமான செயலி (App) போன்ற நவீன வசதிகளும் இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த அறிமுக நிகழ்வில் Fairway Holdings தவிசாளர் விராத் டி அல்விஸ் உரையாற்றுகையில், “Fairway Latitude எமக்கு பல புதிய தொடக்கங்களின் அடையாளமாகும். இது எமது ஏழாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் என்பதுடன், கொழும்பின் வர்த்தக வலயத்திற்குள் (Business District) நாம் ஆரம்பித்துள்ள முதலாவது குடியிருப்பு முயற்சியும் இதுவாகும். இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது முந்தைய செயற்திட்டங்களை வரையறுக்கும் அதே உயர்தரமான Fairway தரநிலைகளை இதிலும் வழங்குவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக எமக்கு ஆதரவளித்து வரும் எமது பங்காளிகளுக்கும், குறிப்பாக செலான் வங்கிக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
தனித்துவமான மற்றும் உயர்தர வாழ்க்கைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் நேர்த்தியான கட்டிடக்கலை (Straight-line architecture), அதிக வெளிச்சம் மற்றும் இடவசதி கொண்ட வடிவமைப்பு, ஐரோப்பிய தரத்திலான சமையலறைகள் மற்றும் உயர்தரமான உள்ளக அலங்காரங்களைக் கொண்டுள்ளன. Fairway நிறுவனத்தின் அடையாளமான எளிமையான மற்றும் நேர்த்தியான (Minimalist) வடிவமைப்பிற்கு இணங்க, மக்கள் நலனை மையப்படுத்திய திட்டமிடலுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன. Fairway Latitude இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகளைக் கொண்ட வீடுகளைக் கொண்டுள்ளதுடன், இவை 902 முதல் 2,881 சதுர அடி வரையான பரப்பளவுகளைக் கொண்டவை. மேலும், ஒவ்வொரு வீடும் தரமான மரத்தாலான (Engineered timber) கதவுகள் மற்றும் தரைகள், இரட்டை மெருகூட்டப்பட்ட uPVC ஜன்னல்கள், ஸ்மார்ட் ஹோம் (Smart Home) வசதிகள், வலுசக்தி சேமிப்பு அமைப்புகள் மற்றும் LED விளக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இவை Fairway நிறுவனத்தின் நிலைபேறான (Sustainability) விழுமியங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
Fairway Group பிரதம நிறைவேற்று அதிகாரி அஷேன் கர்தெலிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பின் சொகுசு தொடர்மனைச் சந்தையில் இது மிகவும் பிரத்தியேகமான செயற்திட்டமாகும். தற்போது கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதுடன், ஏற்கனவே ஆறு மாடிகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டமானது 2028 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவடையும் வகையில் சீரான வேகத்தில் முன்னேறி வருகின்றது. இந்த வேகமான முன்னேற்றத்தின் காரணமாக, குடியிருப்பாளர்கள் திட்டமிட்டதை விட முன்னதாகவே இங்கு குடியேறி, Latitude வழங்கும் நிகரற்ற வசதிகளை அனுபவிக்க முடியும். மேலும், ஏனைய ஒத்த திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இது முதலீட்டாளர்களுக்கு தம் முதலீட்டின் மீது அதிக வருமதியை (Higher return on investment) ஈட்டித் தரும் வகையில் அமைந்துள்ளதால், Latitude ஒரு சிறந்த வசிப்பிடமாகவும், பாதுகாப்பான நிதி முதலீடாகவும் திகழ்கின்றது.” என்றார்.
கொழும்பின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு சந்தையில் Fairway Latitude ஒரு தனித்துவமான உள்ளடக்கமாகும். 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள Fairway Holdings நிறுவனம், இதுவரை 6 திட்டங்களின் ஊடாக 1,000 இற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. Fairway On The Waterfront, Fairmount Urban Oasis, Fairway SkyGardens, Fairway Galle, Fairway Elements மற்றும் Fairway Urban Homes போன்ற எமது கட்டுமானங்கள் நகரின் தோற்றத்தையே மாற்றியமைத்துள்ளன. அந்த வரிசையில், Fairway Latitude அதன் தனித்துவமான வசதிகளுடன், விதிவிலக்கான ஆடம்பரத்தையும் சௌகரியத்தையும் இணைத்து வழங்கும் எமது பாரம்பரியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது. மேலதிக தகவல்களுக்கு www.latitude.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

