Jan 22, 2026 - 02:49 PM -
0
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்வதோடு எந்த தெளிவான தீர்வும் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நீண்டகால தாமதமானது பாதிக்கப்பட்ட தனிப்பட்ட இறக்குமதியாளர்களிடையே கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதோடு இந்நிலை கடுமையான நிதி சிரமங்களையும் உணர்ச்சி ரீதியான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாகனங்களை இறக்குமதி செய்த தனிநபர் இறக்குமதியாளர்கள், சுங்க வரி கோரிக்கைகள் மாறுபடுவதாக விளக்கினர். சில சந்தர்ப்பங்களில், கோரப்படும் வரிகள் வாகனங்களின் உண்மையான மதிப்பை விடவும் சுமார் மூன்று மடங்கு அளவுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த தொடர்ந்து நீடிக்கும் தாமதத்தால் அரசாங்கத்திற்கு சுமார் ரூபா 4.5 பில்லியன் அளவிலான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தக் குழு சுட்டிக்காட்டியது. வாகனங்களின் நீண்டகால தடுப்பு பல தனிநபர் இறக்குமதியாளர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்கள் 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபா வரை உயர்ந்துள்ளதோடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பலரும், இந்த அதிகரித்து வரும் கட்டணங்களுக்காகவே வெளி ஆதாரங்களிலிருந்து அதிக வட்டி விகிதத்தில் கடன்கள் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இவை அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநொட்டு கடனுறுதிக் கடிதம் ஒப்பந்தம் (Cross Border Letter of Credit) முறையின் கீழ் சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனிப்பட்ட இறக்குமதியாளர் குறிப்பிட்டபடி, பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ததற்காக அவர் எதிர்கொள்ளும் மேலதிக நிதி சுமை பின்வருமாறு உள்ளது:
பொருந்தக்கூடிய சுங்க வரி: LKR 16.5 மில்லியன்
சுங்க அபராதம் (வரியில்): LKR 8.5 மில்லியன்
அபராத கட்டணம்: LKR 4 மில்லியன்
மொத்த மேலதிக சுமை: LKR 12.5 மில்லியன்
இந்த அளவிலான மேலதிக செலவுகள், சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏற்படுத்தியுள்ள நிதி அழுத்தத்தை விளக்குகின்றன. தற்போதுள்ள அனைத்து விதிமுறைகளையும் நல்ல நம்பிக்கையுடன் பின்பற்றியிருந்தும், தங்கள் தவறினால் அல்லாத காரணங்களால் தற்போது கடன் சுமையால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு தனிப்பட்ட இறக்குமதியாளர் குறிப்பிட்டார்.
இறக்குமதியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடி நிவாரண நடவடிக்கைகளை கோரி அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இதில் தற்காலிக அபராத சலுகைகள், கட்டமைக்கப்பட்ட கட்டண ஏற்பாடுகள் மற்றும் சுங்க விதிமுறைகளின் நிலையான பயன்பாடு ஆகியவை உள்ளடங்கும்.
மேலும், அதிகாரிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் இடையே திறந்த மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் நியாயமான தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அக்குழு, இவ்விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஊடக நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் அரசாங்கம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்தால், மேலும் நிதி இழப்புகளைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

