Jan 22, 2026 - 06:48 PM -
0
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் பங்களாதேஷ் வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பங்களாதேஷ், டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது.
அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது.
ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2 ஆவது முறையாக பங்களாதேஷ் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.
ஆனால் அட்டவணையில் மாற்றம் எதுவும் செய்ய இயலாது என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக கூறி விட்டது. இந்த நிலையில் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இந்தியா வரும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும்படி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் போர்டு இயக்குனர்கள் நேற்று (21) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தனர். இதில் பங்களாதேஷின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால் அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதாவது பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளித்தது.
இந்த நிலையில், இந்தியாவில் விளையாட மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நாங்கள் டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட விரும்புகிறோம் ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம் ஐசிசியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம் முஸ்தாபிசுர் ரகுமான் விவகாரம் ஒரு தனிப்பட்ட பிரச்னை அல்ல. என தெரிவித்துள்ளார்.

