செய்திகள்
விமான சேவைகள், துறைமுகங்களை மேம்படுத்த பிரான்ஸ் எதிர்பார்ப்பு

Jan 22, 2026 - 11:50 PM -

0

விமான சேவைகள், துறைமுகங்களை மேம்படுத்த பிரான்ஸ் எதிர்பார்ப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இச்சந்திப்பின் போது பிராந்தியத் தொடர்புகளை வலுப்படுத்துதல், விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பிரதான மையமாக இலங்கை விளங்குவதால், பிரான்ஸிற்கு இது விசேட முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தூதுவர் ரெமி லம்பேர்ட் குறிப்பிட்டார். 

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். 

டித்வா புயலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்க பிரான்ஸ் பங்களிப்பு செய்ததாகக் குறிப்பிட்டார். 

மேலும், பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (AFD) ஊடாக மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்க பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ஆண்டுதோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர். 

புயலுக்கு பின்னரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஆலோசனைகளை சாதகமாகப் பேண பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கையின் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த சிக்னல் அமைப்புகள், ரேடார் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களில் பிரெஞ்சு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முடியும் எனத் தூதுவர் தெரிவித்தார். 

மத்தல விமான நிலையத்தில் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் முதலீட்டுத் திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தூதுவர் சுட்டிக்காட்டினார். 

அதேநேரம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் குறித்து, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் சாத்தியக்கூறு அறிக்கைகள் கிடைத்தவுடன் பொருத்தமான முதலீட்டு மாதிரி குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார். 

இலங்கையின் மூலோபாய ரீதியான அமைவிடம் வான் மற்றும் கடல் ஆகிய இரு துறைகளுக்கும் மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரான்ஸுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05