Jan 24, 2026 - 07:48 AM -
0
ஜம்மு காஷ்மீரில் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மலைப்பாங்கான மாவட்டங்களில் பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேநேரத்தில் ஜம்மு நகரம் உள்பட சமவெளிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் நகரம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவை சந்தித்துள்ளது, இது உள்ளூர்வாசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பன், பாரமுல்லா, பதோத், தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரஜோரி, ரியாசி, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்தது.
பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் 5 அங்குலம் முதல் ஒரு அடி வரை பனி குவிந்துள்ளது. வடக்கு காஷ்மீரில் 300 பனி அகற்றும் எந்திரங்கள் மூலம் வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக 26 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே வீதியான 270 கி.மீ. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பனிஹால்-காசிகுந்த் பகுதியில் நவ்யுக் சுரங்கப்பாதையில் பனிப்பொழிவு காரணமாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கியும், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் குவிந்து வரும் பனிகட்டிகளால் முகல் வீதி, ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வீதிகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை பயணிகள் பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜோரி, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களின் மலைப்பாங்கான மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல இமாசல பிரதேசத்தில் ஷிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

