Jan 24, 2026 - 10:31 AM -
0
மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் குறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்காகப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்துள்ளார்.
இதனை அவ்விடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து, படகு மூலம் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும், காதல் விவகாரம் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வருடத்தின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (23) வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் 3 இளம் யுவதிகளும், 75 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
--

